NEET: முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை.. பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு விளக்கம்

Published On:

| By Mathi

Didn't meet CM Vijay: Rapper Therukural Arivu clarifies

நீட் தேர்வு விவகாரத்தில் தாம் முழக்கம் எழுப்பிய பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை தாம் சந்திக்கவில்லை; அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டும் சந்தித்ததாக பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பாடகர் அறிவு அளித்துள்ள விளக்கம்: நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பு நான் குரலெழுப்பினேன்.

ADVERTISEMENT

நீட் தேர்வு மாணவச் சமூகத்திடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம்; மேலும் இழக்கும் அபாயமும் தொடர்கிறது. இந்த நிலை மாணவர்களின் உளவியலையும் நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடியது. எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களில் ஒருவனாக எனது கோரிக்கை.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன்.

ADVERTISEMENT

நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பாடகர் அறிவு தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share