நாடு முழுவதும் மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுபபேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மற்றும் கல்வி அமைப்பில் உரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பில் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியைக் கலைக்கக் காவல்துறையினர் கடும் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். இதன் தொடர்ச்சியாக, காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று டெல்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம்
டெல்லியில் தீவிரமடைந்துள்ள நீட் எதிர்ப்புக் குரல், தற்போது நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவிலும் விடிய விடியப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று திருவொற்றியூரில் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திருவொற்றியூர் காவல்துறையினர் கல்லூரி வளாகத்தில் நுழைந்து சட்டையைப் பிடித்து 4 மாணவர்களைக் கொடூரமாக இழுத்துச் சென்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் காவல்துறையினர் மிரட்டும் நடவடிக்கையில் இறங்கினார். இதுகுறித்த காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
கைது செய்யப்பட்ட மாணவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைக் கண்டித்து, “கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; மாணவர்கள் மீது அத்துமீறிய காவல் ஆய்வாளர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தி, திருவொற்றியூர் காவல் நிலைய வாயிலில் அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, தனது எக்ஸ் பதிவில், அமித்ஷாவின் காவல்துறையா? திரு விஜய் அவர்களின் காவல்துறையா? தமிழ்நாட்டு அரசுக்கு இது நல்லது இல்லை என தெரிவித்துள்ளார்.
