நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இதுவே சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என முதல்வர் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், டெல்லியில் போராட்டம் நடத்திய காக்ரோச் ஜனதா கட்சியினர் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும் பிரதமர் மோடி- கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரியும் பிரதமர் மோடி இல்லம் முன்பாக நேற்று (ஜூலை 21) ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார், கேரளா முதல்வர் சதீஷன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கேசி வேணுகோபால், பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தை தொடர்ந்து ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அவரது கைதுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் விஜய் இன்று (ஜூலை 22 ) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.”என தெரிவித்துள்ளார்.
