நேற்று மு.க.ஸ்டாலின்.. இன்று அகிலேஷ் யாதவ்.. முதுகில் குத்திய ராகுல் காந்தி?

Published On:

| By Mathi

Did Rahul Gandhi stab Akhilesh Yadav following MK Stalin?

நீட் விவகாரத்தில் இணைந்து போராடிய தமது முதுகில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குத்திவிட்டதைப் போல நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கொந்தளித்தார்.

நீட் தேர்வு மோசடி விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பிரதமர் மோடி இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு சமாஜ்வாதி கட்சியும் ஆதரவளித்திருந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது” என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று ஜூலை 22-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில், நீட் தேர்வு மோசடி தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ பேசுகையில், “நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் என்றுதானே அரசு சொல்லி வருகிறது.. இந்த 3 நாட்களாக நாங்கள் இதைத்தான் சொல்கிறோம்.. எப்படி விவாதம் நடத்துவது? என்பது பற்றி அனைத்து கட்சித் தலைவர்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்” என்றார்.

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால், “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்பதுதான் எங்களது ஒற்றை கோரிக்கை என்றார். அதனால் எப்போது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.

இதனையடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எழுந்து, “அதென்ன பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களை பேச அனுமதிக்கிறீங்க.. காங்கிரஸும் பாஜகவும் ஒப்பந்தம் போட்டுட்டீங்களா? உங்களுக்குள் அண்டர் ஸ்டேண்டிங்கா? எங்களை ஏன் அனுமதிக்கலை?” என கேட்டுவிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்ய முயன்றார்.

ADVERTISEMENT

ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா, “நீங்களும் பேசலாம்.. பேசுங்க” என சொன்னார்.

இதையடுத்து ஆவேசத்தை தணித்தபடி பேசிய அகிலேஷ் யாதவ், “இது காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சியின் பிரச்சனை இல்லையே.. நீட் தேர்வு என்பது மாணவர்களின் பிரச்சனை. நாடாளுமன்றத்தில் விவாதிச்சிருந்தால் நாங்க ஏன் பிரதமர் இல்லம் முன்பாக போய் போராட்டம் நடத்த வேண்டும்? நாடாளுமன்றத்தை முற்றுகையிட வந்த மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே.. எங்கள் பிள்ளைகளின் உடல்களை கிழித்திருக்கிறார்களே? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட உடன் திமுக கூட்டணியில் இருந்து எதுவுமே சொல்லாமல் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்தது காங்கிரஸ். அத்துடன் முதல்வரான விஜய் தலைமையிலான ஆட்சியிலும் காங்கிரஸ் பங்கேற்றது.

காங்கிரஸின் இந்த திடீர் துரோகத்தால் அக்கட்சி மீது திமுக கடுமையான கோபத்தில் இருக்கிறது. இதனால் இந்தியா கூட்டணி உட்பட காங்கிரஸ் இடம் பெறும் எந்த அணியிலும் இருக்கப் போவது இல்லை என ஏற்கனவே திமுக தலைவரான முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தம்முடன் இணைந்து போராடிய அகிலேஷ் யாதவ், நாடாளுமன்றத்தில் ”என்ன பாஜகவும் காங்கிரஸும் ஒப்பந்தம் போட்டு எங்களை கழற்றிவிட்டுட்டீங்களா?” என கேட்டிருப்பது அகிலேஷ் முதுகிலும் ராகுல் காந்தி குத்திவிட்டாரா? என்ற கேள்வியை சமாஜ்வாதி கட்சியினர் எழுப்பி உள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share