5 ஆண்டுகளில் ‘வெற்றித் தமிழகம்’ திட்டம்… ஆளுநர் உரையில் வெளியான 10 முக்கிய தூண்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மாநில ஆளுநா் விஸ்வநாத் அர்லேகர் இதில் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.

ஆளுநர் உரையில், தமிழக அரசு ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு திட்டத்தைச் செயல்படுத்தும் என்ற முக்கிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அதில், “தமிழ்நாட்டின் வளர்ச்சியினை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு திட்டங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

தமிழ் அடையாளங்கள் மற்றும் பெருமை, கண்ணியமான வாழ்வு, சமூகப் பாதுகாப்பு, மாநில நலன், இளைஞர் நலன், விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் நலன், மீனவர் நலன், உலகத்தரம் வாய்ந்த கல்வி, வளமான தமிழ்நாடு, சிறந்த மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள் மற்றும் மக்கள் நல அரசு, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் எனப் பத்து தூண்களை உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையாக இது இருக்கும்.

எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தைத் தந்து, அதன் மூலம் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய இந்த அரசு தொடர்ந்து செயலாற்றும். மேலும், மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்ப, வரும் காலத்தில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

ADVERTISEMENT

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது இந்த அரசின் கடமையாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share