முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. Velumani son wedding Edappadi absent
அதிமுகவின் தலைமை கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ் தீக்ஷனா நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெற்றது.
அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வேலுமணியின் இல்ல நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. அப்போது, ‘நிச்சயமாக திருமணத்துக்கு வந்துவிடுகிறேன்’ என்று வாழ்த்து செய்தி மட்டும் அனுப்பியிருக்கிறார்.
நிச்சயத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததே அரசியலில் பேசு பொருளானது. இதைதொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, தனது மகன் திருமணத்துக்காக அதிமுகவையும், அரசியலையும் கடந்து பல்வேறு கட்சியினருக்கும், திரைபிரபலங்களுக்கும் பத்திரிகை வைத்தார்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார். டெல்லிக்கும் மகன் திருமணத்திற்காக பத்திரிகை வைக்க சென்று வந்தார்.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி மகா சிவராத்திரிக்காக ஈஷா யோகா மையம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பத்திரிகை வைத்து அவசியம் மகன் திருமணத்துக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மின்னம்பலத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு உறுதி கொடுத்த அமித் ஷா: கோவையில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், வேலுமணியின் மகன் மகன் விகாஷ் – தீக்ஷனா திருமணம் இன்று (மார்ச் 3) கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.பி.அன்பழகன் என பலரும் கலந்துகொண்டனர்.
எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர் சி-யுடன் வந்திருந்தார்.
அண்ணாமலை வந்த போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் , தங்கமணி உள்ளிட்டோர் சிரித்த முகத்துடன் கைகுலுக்கி வரவேற்றனர்.

பின்னர் மேடைக்கு பரிசு மற்றும் பூங்கொத்துடன் சென்ற பாஜக தலைவர்கள் மணமக்களை வாழ்த்தினர். அப்போது அண்ணாமலை காலிலும், தமிழிசை காலிலும் விழுந்து மணமக்கள் வாழ்த்து பெற்றனர்.
எஸ்.பி.வேலுமணி, எல்.முருகன் மற்றும் அண்ணாமலைக்கு நடுவே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பாஜக தலைவர்கள் மகன் திருமணத்தில் குவிந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி வரவில்லை. அவர் வராதது தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக கூறி வரும் நிலையில், எஸ்.பி.வேலுமணி பாஜகவினருடன் நெருக்கமாக இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் வரும் மார்ச் 10ஆம் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்றும் ஈபிஎஸ் மகன் மீதுன் நேற்று (மார்ச் 2) இரவே வந்து மக்களை சந்தித்து வாழ்த்து கூறிச் சென்றார் என்றும் கோவை அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.

நேற்று இரவே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், வேலுமணி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. Velumani son wedding Edappadi absent