ஈஷா யோகா மையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசியுள்ளார். Amit Shah gave assurance to SP Velumani
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நேற்றிரவு மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். நேற்று கோவையில் நடைபெற்ற பாஜக அலுவலகங்கள் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு முதல் தமிழகத்தில் நடந்த குற்றச்செயல்கள் வரை அனைத்தையும் பட்டியலிட்டார்.
இந்தநிலையில் மாலை சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு சென்றார்.
சிவராத்திரி விழாவில் பங்கேற்று வழிபாடு செய்து, நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.
அதன்பின் ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள அறையில் ஓய்வெடுக்கச் சென்றார்.
அப்போது முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி அமித்ஷாவை சந்தித்தார்.
இவர்கள் திடீர் சந்திப்பு பற்றி எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.
“வேலுமணியின் மகன் திருமணம் வரும் மார்ச் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அமித்ஷாவை திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அமித்ஷாவும் அவசியம் வருகிறேன் என்று உறுதி கொடுத்தார். அந்த சந்திப்பின் போது அரசியலும் பேசப்பட்டது்” என்கிறார்கள்.
முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. எந்த சூழ்நிலையிலும் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
நேற்று பாஜக நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, திமுகவை விமர்சித்தாரே தவிர அதிமுகவை பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.
இந்த நிலையில் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய எஸ்.பி.வேலுமணி அமித்ஷாவை சந்தித்திருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். Amit Shah gave assurance to SP Velumani