அதிமுகவின் தலைமை கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ் வேலுமணிக்கும் டெக்ஸ்மோ குழுமத்தினரின் இல்ல மணப்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருமண உறுதி செய்தல் அதாவது நிச்சயதார்த்த நிகழ்வு ஆகஸ்டு 23 ஆம் தேதி கோவையில் நடைபெற்றது.
வேலுமணியின் மகன் திருமண நிச்சயதார்த்தம் என்பதால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, சி.வி. சண்முகம், செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் வந்திருந்தனர்.
கோவை மாவட்டத்தின் அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
ஆனால் இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கும் வேலுமணிக்கும் அதிமுகவில் ஊடல் என தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில்… வேலுமணி வீட்டு விசேஷத்துக்கு வராதது அதிமுகவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் விழா நடந்த அன்று சேலத்தில்தான் இருந்திருக்கிறார் எடப்பாடி. சேலத்தில் இருந்து கோவை செல்லாதது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இதுகுறித்து வேலுமணி வட்டாரத்தில் விசாரித்தபோது, “வேலுமணியின் மகன் விகாஷ் வேலுமணியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. எடப்பாடியிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார் வேலுமணி. கல்யாணத்துக்கு கண்டிப்பாக வந்துவிடுகிறேன் என்று சொல்லி வாழ்த்து தெரிவித்துள்ளார் எடப்பாடி.
நிச்சயதார்த்தம் என்பது குடும்ப விழா. இன்னாருக்கு இன்னாரை திருமணம் செய்துகொடுக்கிறோம், செய்துகொள்கிறோம் என்று உறுதி செய்துகொள்ளும் ஓர் எளிய நிகழ்வு. திருமணம்தான் விழா.
எனவே திருமண விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வது என்பதுதான் இருவரும் பேசி எடுத்த முடிவு. எனவே நிச்சயதார்த்த நிகழ்வில் எடப்பாடி கலந்துகொள்ளாதது ஏன் என்ற கேள்வியே எழவில்லை.
2023 செப்டம்பரில் வேலுமணியின் அண்ணன் அன்பரசன் மகன் திருமணம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது எடப்பாடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தினார் வேலுமணி.
தன் அண்ணன் மகன் திருமணத்துக்கே அப்படி என்றால், தன் மகன் திருமணத்துக்கு எடப்பாடி பழனிசாமியை எவ்வாறு பிரம்மாண்டமாக வரவேற்பது என்று இப்போதே திட்டமிட்ட ஆரம்பித்துவிட்டார். திருமணத்தில் பாருங்கள்” என்கிறார்கள்.
அதேநேரம் வேலுமணி வீட்டு விசேஷத்துக்கு எடப்பாடி தலையை காட்டியிருந்தால் இந்த விவாதத்துக்கு வாய்ப்பே இல்லையே என்று கொங்கு அதிமுகவினரே பேசிக் கொள்கிறார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”மத அடிப்படையிலான விழாக்கள் நடத்துவதை அரசு தவிர்க்க வேண்டும்”: கே.பாலகிருஷ்ணன்
மத்திய அரசு தடை விதித்துள்ள மருந்துகள் எவை, எவை?
பிரதமர், முதல்வரைப் பாராட்டிய மனைவி : விவாகரத்து செய்த கணவன்!
ஹெல்த் டிப்ஸ்: பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அளவு தாண்ட வேண்டாம்!