‘இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா’ என்ற வார்த்தைகளின் சிண்டைப் பிடிக்கும் படங்கள் அவ்வப்போது வெளிவரும்.
குறிப்பிட்ட சாதி அடையாளங்களைத் தாங்கி நிற்பதோ, ஆணவக்கொலை உள்ளிட்ட கொடுமைகளைக் குறிப்பிட்டுச் சொல்வதோ, சம்பந்தப்பட்ட மனிதர்களையோ இடங்களையோ மறைமுகமாக உணர்த்துவதோ அப்படங்களில் நிறைந்திருக்கும். அவ்வரிசையில் இடம்பிடித்திருக்கிறது சுகுமார் அழகர்சாமியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வர்ணாஸ்ரமம்’.
ஒவ்வொரு பிரேமிலும் அழகியல் இழைக்கப்பட்டிருப்பதே இப்படத்தைத் தொடர்ந்து காண்பதற்கு வழி செய்திருக்கிறது. சில இடங்களில் ஆவணப்பட பாணியில் திரைக்கதை நகர்வதையும் பொருட்படுத்தாமலிருக்க உதவி செய்திருக்கிறது.
எல்லாம் சரி, படத்தின் உள்ளடக்கம் பார்வையாளர்களை ஈர்க்கிறதா?
தோலுரிக்கப்படும் ஆணவக் கொலைகள்!

தமிழ்நாட்டில் நிலவும் சாதீயத்தையும், அதனால் நிகழும் ஆணவக் கொலைகளையும் மையமாகக் கொண்டு ஒரு ஆவணப்படம் எடுக்க விரும்புகிறார் ஒரு வெளிநாட்டுப் பெண். தரவு சேகரிப்பு, ஒளிப்பதிவு என்று ஒரு குழுவையும் அமைக்கிறார். ஆட்டோக்காரர் ஒருவர் வாகனமோட்டப் பணியமர்த்தப்படுகிறார். அதையடுத்து, ஆணவக் கொலைகளின் வேர் தேடி அவர்களது பயணமும் தொடங்குகிறது.
ஒரு பெண் தனது காதலரை ஆணவப் படுகொலைக்குப் பறிகொடுக்கிறார். அவரது பெற்றோரைத் தமது சொந்தமாகப் பாவிக்கிறார். காதலரின் ஐஏஎஸ் கனவு எப்படிப் பொசுங்கியது என்பது அப்பெண்ணின் பார்வையில், சொல்லப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட பின்னணியைச் சேர்ந்த ஒரு இளைஞனைத் தமது சகோதரி விரும்புகிறார் என்று தெரிந்தும், சகோதரர்கள் அந்த காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகின்றனர். ஆனாலும், அப்பெண்ணை எரித்துக் கொன்றதாக அவரது சகோதரர் கைதாகிறார். அதன் பின்னணியில் ஊராரும் சாதி அமைப்புகளும் இருப்பது அம்மனிதரின் வாயாலேயே சொல்லப்படுகிறது.
ஒரு தாயின் தவறான புரிதலால், அவரது மகளுக்கு இளைஞர் ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த தாய் தந்தையரின் கெடுபிடிகளே அந்தப் பெண் அந்த இளைஞனோடு ஊரை விட்டு ஓடிப்போகும் முடிவை நோக்கித் தள்ளுகிறது. உயிருக்குப் பயந்து ஓடும்போது, அந்த ஜோடிக்கு ஆவணப் படக்குழு உதவுகிறது. அவர்கள் இருக்குமிடத்தைத் தேடிவரும் அப்பெண்ணின் தந்தை, மனம் மாறி அந்த காதலர்களை ஊருக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அவர்கள் வீடு போய்ச் சேரவில்லை.
இந்த மூன்று கதைகளோடு, ஆதிக்க மனப்பான்மையோடு வாழ்ந்த ஒரு மூர்க்கனால் ஒரு பெண் கர்ப்பிணியான கதையும் கூறப்படுகிறது. அந்த கர்ப்பிணிப் பெண்ணும் அவரது காதலரும் காலப்போக்கில் என்னவானார்கள் என்பதன் பின்னணியிலும் சாதி ஆணவமே இருந்திருக்கிறது.
இந்த நான்கு நிகழ்வுகளுக்கு நடுவே, சமகாலத்தில் நகரத்திலும் சாதி மனப்பான்மை இருப்பதைப் புரிந்துகொள்கிறார் அந்த வெளிநாட்டுப் பெண். சமூக யதார்த்தம் உணர்ந்தபிறகும் அவரது முயற்சி பூர்த்தியானதா என்பதைச் சொல்கிறது ‘வர்ணாஸ்ரமம்’ திரைப்படம்.
கருத்து சொல்லும் முயற்சி!

முதல் கதையில் ஸ்ரீராம் கார்த்திக் – குஹாசினி, இரண்டாம் கதையில் வாசுதேவன் – நிமி மேனுவல், மூன்றாம் கதையில் விஷ்ணு பாலா – வந்தனா, நான்காம் கதையில் அமீர் – உமா மகேஸ்வரி ஜோடிகள் தோன்றியிருக்கின்றனர். இவர்களோடு ஆவணப்படம் எடுக்கும் பெண்ணாக சிந்தியா லூர்தேவும், அவருக்கு உதவுபவர்களாக வைஷ்ணவி ராஜும் ராமகிருஷ்ணாவும் வருகின்றனர்.
மிகச்சில காட்சிகள் நாடகம் போலத் தோன்றினாலும், பெரும்பாலும் நேர்த்தியாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக, ஒவ்வொரு பிரேமும் செதுக்கி வைத்தாற்போல இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீணா.
கா.சரத்குமாரின் படத்தொகுப்பு வரிசையாகக் கதைகளை அடுக்க உதவியிருக்கிறது. ஒரு நாயகன் நாயகியைப் புகைப்படம் எடுப்பதன் மூலமாக அவரது மனதில் இடம்பிடிக்கிறார் என்று எழுத்தில் வடிக்கப்பட்டதைக் காட்டவும் படத்தொகுப்பு உதவியிருக்கிறது.
இயக்குனரின் எண்ணங்களைத் திரையில் செயற்கைப்பூச்சு இன்றி வெளிப்படுத்த வகை செய்திருக்கிறது புத்தமித்ரனின் கலை வடிவமைப்பு.
இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி இசையில் ‘உனக்கும் எனக்கும்’, ‘மழைக்கால வெயிலாக’ பாடல்கள் மெலடி மெட்டுகளாக அமைந்திருக்கின்றன. பறையிசையின் அதிர்வை உணரச் செய்யும் ‘கம்பு 30 டயரு 30’ பாடலும், தேவையான இடங்களில் மட்டுமே ஒலிக்கும் பின்னணி இசையும் காட்சிகளைச் செறிவானதாக்கி இருக்கிறது.
சாதி பற்றி விமர்சித்தபோதும், எத்திசையில் இருந்தும் எதிர்க்கேள்விகள் எழாதவாறு கவனமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சுகுமார் அழகர்சாமி. டி.அருள் எழிலன். மனுஷ்யபுத்திரன் போன்ற ஊடக ஆளுமைகளின் துணை அதற்கு கைகொடுத்திருக்கிறது.
‘வேண்டாம்னு சொல்ற வெளிநாட்டுக்காரங்களை வீட்டுக்குள்ள கூப்பிட்டு சாப்பாடு போடுவீங்க, ஆனா எங்களை வீட்டுக்கு வெளியில நிக்க வைப்பீங்க’, ‘உன்னோட கோயில்னு சொல்றியே, உன்னால கோயில் கருவறைக்குள்ள போக முடியுமா’, ‘உன்னோட சமூகம்னு சொல்லாத, இங்க சமூகம்கறதே எல்லா சாதியும் சேர்ந்ததுதான்’ என்பது போன்ற வசனங்கள் துருத்திக்கொண்டு தெரியாமல் காட்சி நகரும் போக்கில் சொல்லப்பட்டிருப்பது அருமை.
அதேபோல, சாதிப்பெருமிதங்களும் ஆணவக் கொலைகளும் பெண்ணை மையமாகக் கொண்டே நிகழ்கின்றன என்பதைச் சொல்லும்விதமாக இதில் வரும் காதலி பாத்திரங்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களாகவே அமைத்திருக்கிறார் இயக்குனர். குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக அவர்களை அடையாளம் காண்பது எளிது என்றாலும், எந்தவொரு சாதியையும் இணைத்துப் பார்த்துவிட முடியும் என்பதே சாதீயத்தின் அடிப்படை இழை ஒன்றெனக் காட்டுகிறது.
தமிழ்நாட்டின் திசைக்கொன்றாக கதைகள் நிகழ்கிற களங்கள் விவரிக்கப்பட்டிருப்பது ஆணவக் கொலை என்ற பெயரில் குறிப்பிட்ட சாதிகளை மட்டுமே ‘டார்கெட்’ செய்வதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை நீர்க்கச் செய்யும்.
ஆங்காங்கே இழையோடும் சினிமாத்தனம், செயற்கைத்தனமான முடிவுகள், மிகச்சில இடங்களில் நழுவியிருக்கும் நேர்த்தி போன்றவை இப்படத்தின் பெருங்குறைகள். அதையும் தாண்டி, ஆவணப்படம் என்று சொல்லி ரசிகர்கள் தம் மனக்கதவைச் சாத்திவிடக் கூடாது என்பதில் இயக்குனரும் படக்குழுவினரும் அக்கறை காட்டியிருக்கின்றனர்.
பல இடங்களில் வசனங்களை மௌனத்தால் நிரப்பச் செய்திருக்கிறது சென்சார் போர்டு. கார்ல் மார்க்ஸ், பெரியார் ஓவியங்களைப் பார்த்து வில்லன் கோஷ்டி பேசும் வசனங்களை ‘கட்’ செய்ததோடு திரையில் காட்சியையும் ‘ப்ளர்’ செய்ய மெனக்கெட்டிருக்கிறது. இதெல்லாம் எதில் சேர்த்தி என்று தெரியவில்லை. அடிப்படைக் கதையமைப்பு கெடும் வகையில் இன்னும் எத்தனை ‘கட்’கள் கொடுக்கப்பட்டனவோ தெரியவில்லை.
அனைத்தையும் மீறி சார்புநிலை ஏதுமில்லாமல், சாதாரண மனிதர்களின் பார்வையில் ஆணவப் படுகொலைகளின் பின்னிருக்கும் அத்தனை அம்சங்களையும் விமர்சித்திருக்கிறது ‘வர்ணாஸ்ரமம்’. அதற்காக, இதனை விருதுக்காக எடுக்கப்பட்ட படம் என்று காணாமல் புறக்கணித்துவிடக் கூடாது. போலவே, இப்படத்தை டிவியிலோ, ஓடிடியிலோ பார்த்துவிடலாம் என்று இருந்துவிடவும் கூடாது. காரணம், அவ்வாறு நிகழத் தியேட்டர்களில் மிகச்சில காட்சிகளாவது ஓடியிருக்க வேண்டும். அதற்காகவாவது, இது போன்ற படங்களைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டர் வாசலில் திரள வேண்டும்!
உதய் பாடகலிங்கம்
200ஆவது நாளில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்: வேல்முருகன் ஆதரவு!