பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் இன்று (பிப்ரவரி 11) 200ஆவது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2ஆவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தைச் செயல்படுத்தப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை அளிப்பதற்குத் தகுதியான நிறுவனத்தைத் தேடி வருகிறது.
இதுகுறித்த ஒப்பந்தப் புள்ளி கடந்த டிசம்பர் மாதம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப் புள்ளிக்கான கால அவகாசம் இரண்டாவது முறையாகப் பிப்ரவரி 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச்சூழலில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்று 200ஆவது நாளை எட்டியிருக்கிறது.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனை, காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் போராட்ட களத்துக்குச் சென்று கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது உரையாற்றிய அவர், “என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலம் கொடுத்தவர்கள் இன்று வரை வேலை பெறமுடியாமல், வீடுவாசல் இல்லாமல் தவிக்கின்றனர்.
இன்று இந்திய அரசுக்கு ஒரு விமானம் கூட இல்லை. ஏர் இந்தியா விமானங்களையும் டாடா நிறுவனத்துக்கு மோடி அரசு விற்றுவிட்டது. அப்படி இருக்கும் போது இங்கு எதற்கு விமான நிலையம்?.
இன்று டாடாவிடம் இருக்கும் விமானங்கள் நாளை அதானியிடம் போகலாம். அதானி கைகளிலிருந்து அம்பானி கைக்கு மாறும்.
அல்லது ஒன்றிய அரசின் அமித்ஷாக்களால் உருவாக்கப்படும் புதிய தொழில் அதிபர்களுக்கு கைக்குப் போகலாம்.
இந்தியன் ஏர்லைன்ஸ்கோ, ஏர் இந்தியாவுக்காகவோ கேட்டால் கூட ஏரி, குளம், வீடு பாதிக்கப்படாத இடமாகப் பார்த்து நிலம் தருவோம். ஆனால் நீங்கள் அதானிக்கும், டாடாவுக்காவும் நிலத்தைக் கேட்கிறீர்கள்.
அவசர அவசரமாக இந்த திட்டத்தை நிறைவேற்றக் காரணம் என்ன? இங்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை 50 ஆண்டு காலமாக ஆண்டுகொண்டிருக்கும் இருகட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.
இந்த பகுதியைச் சுற்றி மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு விலை வேண்டும் என்பதற்காக இப்படி வேகமாக வேலை செய்கிறார்கள்.
நாளை இந்த 13 கிராம மக்களிடம் எப்படி வந்து ஓட்டு கேட்பார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
இன்றைய போராட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரியா
லாக்கர்பை நினைவிடம் சென்ற அஜித்: காரணம் இது தான்!
சிங்கார சென்னை 2.0 திட்டம்: ரூ.98 கோடி ஒதுக்கீடு!