திரையுலகில் சோகம்: மூத்த நடிகர் சத்யேந்திரா காலமானார்… உடலை வாங்க ஆள் இல்லாத அவலம்; நடிகை வினோதினி உருக்கமான வேண்டுகோள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

veteran actor film critic satyendra passes away royapettah hospital actress vinodhini appeal relatives

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களுக்குப் பரிச்சயமான மூத்த நடிகர் மற்றும் சினிமா விமர்சகர் எஸ். சத்யேந்திரா (Satyendra) (65), உடல்நலக் குறைவால் நேற்று (மே 28, 2026) காலமானார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பன்முகத் திறமை கொண்ட கலைஞர் சத்யேந்திரா (Satyendra)

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த சத்யேந்திரா, புகழ்பெற்ற நாடக இயக்குனர் பி.வி. காரந்தின் தொடர்பால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் தேசிய விருது பெற்ற ‘நாகபர்ணா’ என்ற கன்னடத் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 7 மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 150-க்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், யூடியூப் விமர்சகர் எனப் பன்முகத்திறன் கொண்டவராக விளங்கிய இவர், தமிழில் ‘ஏழாவது மனிதன்’ (1982) படம் மூலம் அறிமுகமானார். எடிட்டர் லெனின் இயக்கி 1992ம் ஆண்டு வெளிவந்த தேசிய விருது பெற்ற நாக்-அவுட் குறும் படத்தில் பிணமாக நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து மண்வாசனை, சத்யா, மீண்டும் ஒரு காதல் கதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு மற்றும் ஜி.வி. பிரகாஷின் ‘ஜெயில்’ (2021) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT
உடலை வாங்க யாரும் வராத சோகம்

சத்யேந்திரா மறைவைத் தொடர்ந்து, அவரது உடல் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மோர்ச்சரியில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது பெங்களூரு அல்லது கர்நாடகாவில் உள்ள இரத்த உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது. சென்னையில் அவர் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் அவரது உறவினர்களைத் தேடி வருகின்றனர். ஒரு மூத்த கலைஞனின் உடலை வாங்க ஆள் இல்லாமல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் நடிகை வினோதினி கோரிக்கை

இந்தத் துயரமான சூழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் பிரபல தமிழ் நடிகை வினோதினி வைத்தியநாதன். சத்யேந்திராவின் மொபைல் எண்ணிற்குத் தொடர்பு கொண்ட போது, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை காவல்துறை அதிகாரி பேசியதாகக் குறிப்பிட்டுள்ள வினோதினி, சத்யேந்திராவின் உறவினர்களைக் கண்டறிய உதவுமாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். அலையன்ஸ் ஃபிரான்சிஸ் (Alliance Francaise) மற்றும் கோதே இன்ஸ்டிடியூட் (Goethe Institute) போன்ற கலாச்சார அமைப்புகளுடன் சத்யேந்திராவுக்கு இருந்த தொடர்புகளைக் குறிப்பிட்டு, அங்குள்ள யாருக்காவது அவரது இரத்த உறவினர்கள் பற்றித் தெரிந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT
உறவினர்களைத் தேடும் காவல்துறை

சத்யேந்திராவின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் யாராவது முன்வர வேண்டும் என ஒட்டுமொத்தத் திரைத்துறையினரும் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காவல்துறை தரப்பிலும் அவரது பழைய முகவரிகள் மற்றும் தொலைபேசிப் பட்டியலை வைத்து பெங்களூருவில் உள்ள அவரது சொந்தக்காரர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தனை படங்களில் நடித்து, கலையுலகிற்குப் பங்காற்றிய ஒரு மூத்த கலைஞனின் இறுதிப் பயணம் இப்படி அநாதையாக மாறிவிடக் கூடாது என்ற ஆதங்கம் ரசிகர்களிடமும் எழுந்துள்ளது.

Photo of author
Santhosh Raj Saravanan

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share