நடிகர் அஜித்குமார் ஸ்காட்லாந்தில் உள்ள லாக்கர்பை விமான குண்டு வெடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார்.
துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் வெளிநாடுகளுக்கு தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
போர்ச்சுக்கல்லில் அஜித் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதனை தொடர்ந்து அஜித் ஸ்காட்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள கிளாஸ்கங் என்ற நகரில் ரசிகர்களுடன் அஜித் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தநிலையில் லாக்கர்பை விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஜித் புகைப்படம் எடுத்துள்ளார்.
லாக்கர்பை விமான விபத்து:
ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட்டிலிருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட்டுக்கு செல்லும் பான் ஆம் 103 என்ற விமானம் 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி ஸ்காட்லாந்து லாக்கர்பை நகருக்கு மேல் சென்றுகொண்டிருந்தபோது குண்டு வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த குண்டு வெடிப்பில் விமானத்தில் பயணித்த 243 பயணிகள் உள்பட 16 விமானிகள் உயிரிழந்தனர்.

மேலும் லாக்கர்பை நகரில் விமானம் நொறுங்கி விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக இந்த விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர். உலகில் ஏற்பட்ட பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்க போலீசார் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது அப்டெல்பாசட் அல் மெக்ராஹி என்னும் லிபியா நாட்டை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி என்பது தெரியவந்தது.
2001-ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு ஸ்காட்லாந்து சிறையில் அடைக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அப்டெல்பாசட் அல் மெக்ராஹி 2009-ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். 2012-ஆம் ஆண்டு மே மாதம் அவர் உயிரிழந்தார்.
செல்வம்
ஈரோடு வந்த மத்திய பாதுகாப்புப் படை!
பார்டர் கவாஸ்கர் போட்டி: விராட் கோலி மீது கபில் தேவ் நம்பிக்கை!