நடிகர் சத்யேந்திரா உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரது உடலைப் பெற்றுக்கொள்ள யாரும் வராததால் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் ‘ஏழாவது மனிதன்’, ‘மண்வாசனை’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், சின்னத்திரை நாடகங்களிலும் நடித்திருந்த சத்யேந்திரா, எடிட்டர் லெனின் இயக்கிய ‘நாட் அவுட்’ என்ற குறும்படத்தில் பிணமாக நடித்துத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதேபோல், நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த ‘18 வயது’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துத் தனது திறமையை நிரூபித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர் பேசிய திரைப்பட விமர்சனக் காணொளி ஒன்று இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாகத் திரைப்படங்களை விமர்சனம் செய்யத் தொடங்கினார். பல உலக சினிமாக்கள் குறித்த நேர்காணல்களிலும் பங்கேற்றார். தனது பெயரிலேயே யூடியூப் சேனல் தொடங்கிப் பட விமர்சனங்களை வெளியிட்டு வந்த இவர், கடைசியாக ‘கருப்பு’ என்ற திரைப்படத்திற்கு விமர்சனம் செய்திருந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சத்யேந்திரா, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பெங்களூருவில் உள்ள அவரது உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாததால், அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்செய்தி இணையத்தில் வைரலான நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் அறக்கட்டளை சார்பில் உதவ முன்வந்துள்ளார். இது குறித்துத் தனது எக்ஸ் பதிவில்,
“நடிகராகவும் திரைப்பட விமர்சகராகவும் விளங்கிய சத்யேந்திராவின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களோ, உறவினர்களோ தற்போது அருகில் இல்லை என்றும், அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அவருக்கு ஆதரவளிக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டால், தேமுதிக சார்பில் ‘கேப்டன் வள்ளல் விஜயகாந்த் அறக்கட்டளை’ மூலம் அவரது மருத்துவமனைச் செலவுகள் மற்றும் இறுதிச்சடங்கு செலவுகள் உட்பட அனைத்துத் தேவையான உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளோம். மனிதாபிமான அடிப்படையில் இதுபோன்ற சூழ்நிலையில் அவருக்கு உதவ தேமுதிக தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
