VIDEO: எங்கே பாரதிராஜா? கத்தாழங்காட்டு கரிச்சான் கேட்குமே… கருவேலமரம் கேட்குமே.. வைரமுத்து கண்ணீர் இரங்கல்

Published On:

| By Mathi

Vairamuthu expresses tearful condolences over the demise of Bharathiraja

இயக்குநர் இமயம் பாரதிராஜா (Bharathiraja) மறைவுக்கு அவரது நெருங்கிய நண்பரான கவிஞர் வைரமுத்து (Vairamuthu) கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்ட வீடியோ:

பிதாமகனே போய்விட்டாயா…
கிராமத்து ராஜாவே இறந்துபட்டாயா…
எங்கள் மண் வாசனையில், இன்று சாவு மணக்கிறதா?

ADVERTISEMENT

அடைத்துக் கிடந்த திரையுலகக் கதவுகளை, திறந்த வெளிக்கு திறந்துவிட்டவனே…
ஆகாயத்திற்கு அடுத்து, அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவனே…
என்னையும் சுயமரியாதையோடு, சுடரொளி வீசச் செய்தவனே…

உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே என்ற தலைவர்களின் மொழிக்கு இணையாக,
“என் இனிய தமிழ் மக்களே” என்ற ரத்தினச் சொற்களுக்கு முத்திரை சேர்த்தவனே, நீ மாயக்காரன்.
புழுதியை பொன் செய்தாய்.

ADVERTISEMENT

சினிமாவின் நிறம் வெள்ளை என்று இருந்ததை, கருப்பு என்று மாற்றிய கலையாளன் நீ.
இடிந்த சுவர்களும், உடைந்த மனிதர்களும், கிழிந்த வாழ்க்கையும் உன் கலையின் கச்சாப் பொருட்கள்.

இந்தக் கரட்டுப்பட்டியை தில்லி நகரத்திற்கு கொண்டு சேர்த்த அல்லி நகரத்து அரசன் நீ.
இனி நான் எப்படி தனியாக தேனி போவேன்?

ADVERTISEMENT

மேற்குத் தொடர்ச்சி மலை, அருவிகளால் அழுதுகொண்டே கேட்குமே, எங்கே பாரதிராஜா?
கத்தாழங்காட்டு கரிச்சான் கேட்குமே, எங்கே பாரதிராஜா?
கருவேலமரம் கேட்குமே, எங்கே பாரதிராஜா?
என்ன பதில் சொல்வேன்? எப்படி நான் தனித்திருப்பேன்?

நீ தூரிகை, நான் வண்ணம்.
நான் தூரிகை, நீ வண்ணம்.
தூரிகை இல்லாமல் வண்ணமும், வண்ணமில்லாமல் தூரிகையும் என்னத்துக்காகும்?

நீ அரிவாள், நான் கைப்பிடி.
நான் அரிவாள், நீ கைப்பிடி.
அரிவாள் இல்லாத கைப்பிடியும், கைப்பிடி இல்லாத அரிவாளும் என்னத்துக்காகும?

என்னை அழவிடு… என்னை அழவிடு…
உடம்பின் உப்பெல்லாம் கண்ணீராய்க் கரையட்டும்.
இனி என்ன எழுத? நடிகர் திலகம் போல் நானும் புலம்புகிறேன்.

பூங்காத்து திரும்புமா? என் பாட்ட விரும்புமா?
பாராட்ட, மடியில் வைத்து தாலாட்ட எனக்கு ஒரு தாய்மடி கிடைக்குமா?

முதல் மரியாதை செய்தவனே, உனக்கு என் இறுதி மரியாதை!

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share