உலகையே உலுக்கி வந்த அமெரிக்கா – ஈரான் யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய கிழக்கு நாடுகள் போர்ச் சூழலில் கடந்த சில மாதங்களாக சிக்கி இருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் இந்த யுத்தத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகம் மிக மோசமடைந்தது. உலக நாடுகளுக்கு இது பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டன. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாப் ஆகியோர் முதல் கட்டமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டிருந்தனர்.
இதன் அடுத்த கட்டமாக அமெரிக்கா, ஈரான் அதிபர்கள் டிஜிட்டல் முறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் வெர்சாய்ஸ் அரண்மனையில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த டிரம்ப், அங்கேயே ஒப்பந்தத்தின் நகலில் கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்
- ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
- முடக்கப்பட்ட ஈரானிய நிதிகள் விடுவிக்கப்படும். அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் தாராளமாக எண்ணெய் ஏற்றுமதி செய்யலாம்.
- உலக நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியமான ஹார்முஸ் நீரிணை (ஹோர்முஸ் ஜலசந்தி) மீண்டும் திறக்கப்படுகிறது. இதில் ஈரான் மற்றும் ஓமான் நாட்டின் கட்டுப்பாடுகள் தொடரும்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வர்த்தக கப்பல்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஈரான் பெற்றுள்ளது.
- போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் உட்கட்டமைப்பை மேம்படுத்த சுமார் 300 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததில் பாகிஸ்தானுக்கு முக்கிய பங்குண்டு. இதை ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ என்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது?
தற்போதை ஒப்பந்தத்தால் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு வர்த்தக கப்பல்களுக்கு எந்த தடையும் இல்லை. தற்போதைய போர் முடிவுக்கு வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்த பதற்றம் தணிந்துள்ளது.
