அமெரிக்கா-ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் (US-Iran Peace Deal) இன்று ஜூன் 14-ந் தேதி கையெழுத்தாகலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் ராணுவத் தளங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் Operation Epic Fury எனும் கூட்டு ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இத் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதன் விளைவாக ஏற்பட்ட போர், பிராந்தியத்தில் பெரும் நிலையற்ற தன்மையை உருவாக்கியதுடன், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியையும் ஏற்படுத்தியது.
அமைதி ஒப்பந்தம்- டொனால்ட் டிரம்ப் (Donald Trump)
தற்போது இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில்
- ஈரானின் அணுசக்தி செறிவூட்டலைக் கட்டுப்படுத்துவது
- அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது
- இருநாடுகளும் 60 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற உள்ளன.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் உடனடியாக உலகின் அதிமுக்கியமான கச்சா எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி திறந்துவிடப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் இந்தியாவுக்கான பாதிப்புகள்
இந்த போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தடையை ஏற்படுத்தியது. இது இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், இந்தியாவின் பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகியவற்றில் நெருக்கடி ஏற்பட்டது.
- வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் வருமானம் குறித்த கவலைகள் எழுந்தன.
- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டன.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வு
அமெரிக்கா- ஈரான் யுத்தத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் இந்த விலை உயர்வைச் சாமானிய மக்கள் மீது சுமத்தாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
இருப்பினும், மே மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ச்சியான மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதனடிப்படையில் மே 15-ம் தேதி முதல் மே 25-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு மொத்தமாக ரூ7.38 உயர்த்தப்பட்டது; டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.52 உயர்த்தப்பட்டது.
டிரம்ப்பின் தற்போதைய அமைதி ஒப்பந்த அறிவிப்பால் இனி பெட்ரோல்- டீசல் விலை உயர்வு இருக்காது என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
