புது சோபாவுக்கு பின் போன.. புது முதல்வர்.. புஷ்பா பட பாணியில் ஆட்சி – முதல்வர் விஜயை விளாசிய உதயநிதி

Published On:

| By Pandeeswari Gurusamy

Udhayanidhi Stalin

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் புஷ்பா பட பாணியில் ஆட்சி நடப்பதாக விமர்சித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் சுமார் நான்கு கோடியே தொண்ணூற்று மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம். தற்போதைய ஆளுங்கட்சிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே எழுபத்தி இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரம் மட்டுமே. மீதமுள்ள சுமார் மூன்று கோடியே இருபத்தோரு லட்சம் பேரும் உங்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு ஆட்சி இது.

ADVERTISEMENT

எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து, மிக முக்கியமான விஷயம் — பெரும்பான்மைக்கான எண்ணிக்கை. நமது சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. மேஜிக் நம்பர் 118. அதாவது, 118 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியோ, கூட்டணியோதான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், நம்பிக்கை கோரும் இந்தக் கட்சிக்கு அந்த எண்ணிக்கை இல்லை. வெறும் 108 இடங்கள்தான் உள்ளன. அதிலும், அந்தக் கட்சியின் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான அவர்கள் தமது வெற்றி குறித்த நம்பிக்கையின்மை காரணமாக இரு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.

இன்னும் அந்தத் தொகுதி மக்களை நேரில் சந்தித்தோ அல்லது அறிக்கை மூலமாகவோ கூட நன்றி தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல, நேற்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அதனால், தற்போது ஆளுங்கட்சிக்கு வெறும் 106 உறுப்பினர்களே உள்ளனர். ஆனாலும், தேர்தலில் தனக்கு எதிராகப் போட்டியிட்ட எங்கள் தலைவர், அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை எல்லாம் சேர்த்துக்கொண்டு பெரும்பான்மைக்கான கடிதத்தை ஆளுநருக்கு அளித்து, இன்று இந்த ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மரியாதைக்குரிய தலைவர்கள் அனைவரும் ஒரே காரணத்தைச் சொன்னார்கள் — “குடியரசுத் தலைவர் ஆட்சி அமையக் கூடாது” என்பதற்காகவே வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், இன்னொன்றையும் அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள். “எங்கள் தலைவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிதான் தொடரும்” என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.” என்றார்.

ADVERTISEMENT

மேலும் பேசிய அவர், “ஒரு புது சோபா போகுது. சோபாவைத் தொடர்ந்து புது முதலமைச்சரும் அந்த வீட்டுக்குப் போகிறார். “புதுமையான ஆட்சி! புதுமையான ஆட்சி!” என்று சொன்னீர்கள். இன்னைக்கு இங்கே புஷ்பா பட பாணியில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய கொள்கை எதிரி என்று சொல்லும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் போட்டியிட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை, அந்தக் கட்சித் தலைவருக்கே தெரியாமல், திருட்டுத்தனமாக இந்த ஆட்சிக்கு ஆதரவு தர வைத்தீர்கள். இப்போது நான் சொல்வது மிகவும் decent version தான். (அப்போது அமமுக எம்எல்ஏ காமராஜ் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.)

அந்தக் கட்சித் தலைவர் திரு. டி.டி.வி. தினகரன் சொன்னது என்ன தெரியுமா? “ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறார்கள்” என்று சொன்னார். நேற்றும் சொன்னார் — “மாற்றம், மாற்றம்” என்று சொன்னீர்கள். இது மாற்றம் இல்லை, துர்நாற்றம் என்று சொல்லியிருக்கிறார். அடுத்து, அதே பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான அதிமுக இன்று கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. பிளவுபட்ட ஒரு அணி உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இப்போது நடந்திருக்கும் சம்பவம்தான் மிகப் பெரிய twist.

பிளவுபட்ட அந்தக் குழுவின் தலைவரின் வீட்டுக்கு ஒரு புது சோபா போகிறது. சோபாவைத் தொடர்ந்து புதிய முதலமைச்சரும் அந்த வீட்டுக்குப் போகிறார். “புதுமையான ஆட்சி” என்று சொன்னீர்கள். ஆனால் இன்று இங்கே புஷ்பா படபாணியில்தான் ஆட்சி நடக்கிறது.

உங்கள் நடவடிக்கைகள் எல்லாமே இன்று meme content-ஆக மாறிவிட்டன. தமிழ்நாடு வரலாற்றிலேயே முதன்முறையாக, இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒன்று நடந்திருக்கிறது. கட்சித் தாவலுக்கு முன்பே, அந்தக் குழுவின் தலைவர் வீட்டுக்குப் போய், இவ்வளவு வெளிப்படையாக அவர்களுக்கு அழைப்பு விடுத்ததை இதுவரை இந்தியாவில் யாரும் பார்த்ததில்லை.

இதைப் பார்த்த மக்கள் இன்று என்ன கேட்கிறார்கள் தெரியுமா? “Change, Change” என்று சொன்னீர்களே, இந்த மாற்றத்திற்குப் பின்னால் மிகப் பெரிய “Exchange” இருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட மிகப் புதுமையான, வித்தியாசமான செயல்பாடுகள் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்பாகவே இந்த ஆட்சி, தங்களுக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இவர்களுக்கு ஆதரவு கொடுத்த எங்கள் தோழமை இயக்கங்களின் நம்பிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் “ஊழல் சக்தி, ஊழல் சக்தி” என்று சொன்னீர்கள். ஆனால் இன்று சமூக ஊடகங்களில் மக்கள் உங்களைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். என்ன கேட்கிறார்கள் தெரியுமா? “அந்த ஊழல் சக்தியோடு சேர்ந்து இருக்கும் ஆளுங்கட்சியை இப்போது எந்த சக்தி என்று கூப்பிட போகிறார்கள். இதுதான் உங்க தூய ஆட்சியின் லட்சணமா என கேட்கிறார்கள். கூவத்தூரையே மிஞ்சும் அளவிற்கு அடிக்கும் கூத்தை பார்க்கும் போது இந்த அரசு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் உங்கள் நடவடிக்கை மீம் கண்டெண்டாக மாறி விட்டது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share