செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகியுமான வீராசாமி (வீரா), ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாம்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட்/தார் சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிக்கான தொகையை விடுவிக்கக் கோரி, ஒப்பந்ததாரர் நவீன் என்பவர் தவெக நிர்வாகியான ஊராட்சி மன்றத் தலைவரை அணுகியுள்ளார். அப்போது, பணத்தை விடுவிக்க வீராசாமி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, முதற்கட்டமாக ஒப்பந்ததாரர் நவீன் ‘ஜிபே’ (GPay) செயலி மூலம் ரூ.50,000 அனுப்பியுள்ளார். ஆனால், மொத்தம் ரூ.2 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின் ரூ.1.30 லட்சம் கொடுக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது. அதன்படி, மேலும் ரூ.50,000 ஆன்லைன் மூலமாகவும், மீதமுள்ள ரூ.30,000 பணத்தை நேரடியாகவும் ஊராட்சி மன்றத் தலைவரிடம் ஒப்பந்ததாரர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணப் பரிவர்த்தனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி விளக்கம்:
இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி, தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “என் மீதும், தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசு மீதும் திட்டமிட்டுச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். நவீன் என்ற ஒப்பந்ததாரர், நான் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி ஏற்பதற்கு முன்பே இந்தச் சாலைப் பணியைச் செய்து முடித்துவிட்டார். தற்போது எனக்கு செக் வழங்கும் அதிகாரம் (Check Power) எதுவும் இல்லை.
அந்த ஒப்பந்ததாரர் எனது நண்பரின் மூலமாகத் தெரிந்தவர். அவர் ஏற்கனவே என்னிடம் வாங்கியிருந்த ரூ.1.30 லட்சம் கடனைத் தான் நேற்றுத் திருப்பிக் கொடுத்தார். அதை லஞ்சம் வாங்கியது போலச் சித்தரித்துள்ளனர். இப்படி லஞ்சம் வாங்கிச் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனது வளர்ச்சியைப் பிடிக்காத கவுன்சிலர் அருண் இதயவர்மன் மற்றும் சிலர் இணைந்து, என் பெயரையும், அரசின் பெயரையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இணையத்தில் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பொதுமக்கள் லஞ்சம் குறித்த புகார் அளிக்கும் வகையில் 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். இது தவிர, 044-22321090, 044-22321085, 044-22310989 மற்றும் 044-22342142 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாகவும் லஞ்சப் புகார்களைப் பதிவு செய்யலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
