ராமதாஸ் உடன் நின்றது பாவமா? – முன்னாள் எம்எல்ஏ அருள்

Published On:

| By Pandeeswari Gurusamy

PMK Ramadoss Anbumani

ராமதாஸ் அன்பு மணி இருவரும் பிரிந்த போது மருத்துவர் ஐயா உருவாக்கிய கட்சிக்காக அவருடன் நின்றோம்; அது நாங்கள் செய்த பாவமா?” என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் கேள்வி எழுப்பினார்.

பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அருள் பேசுகையில், “டாக்டர் ராமதாஸ் ஐயாவுடன் பயணித்த ஆதரவாளர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பாமகவின் முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து, ‘அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகிறோம்?’ என்பது குறித்து நாளை (வியாழக்கிழமை) அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளோம். சிலரைத் தவிர, மற்ற அனைவரும் தற்போதும் ஒன்றாகவே இருக்கிறோம். நாளை கூட்டத்திற்கு யார் யார் வருகிறார்களோ, அவர்களுடன் விரிவாகக் கலந்தாலோசித்து அதன் அடிப்படையில் இறுதி முடிவை எடுப்போம்.” என்றார்.

ADVERTISEMENT

தேர்தல் கூட்டணிப் பிரிவு குறித்து வேதனை:

தொடர்ந்து பேசிய அவர்,”டாக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் பிரியவே கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இதற்காகத் தைலாபுரம் தோட்டத்து வாசலில் நின்று கத்தி.. கத்தி.. , கெஞ்சி.. கெஞ்சி, கதறி.. கதறி அழுதோம். 5.8 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ள நாம் பிரிந்தால், இரண்டு பக்கமுமே பெரிய பாதிப்பு ஏற்படும் என்று எடுத்துச் சொன்னோம். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் கெஞ்சி அழுதோம். ஆனால், எங்கள் பேச்சை அவர்கள் கேட்கவில்லை.

தேர்தலுக்கு முன்பு பிரிந்து விட்டு, 2.18 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற பிறகு, தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இணைந்து விட்டார்கள். எனது சுய விருப்பு வெறுப்பின்படி நான் செயல்பட்டிருந்தால், இந்நேரம் வேறு கட்சியில் இணைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஆனால், ஐயா உருவாக்கிய கட்சிக்காக அவருடன் நின்றோம்; அது நாங்கள் செய்த பாவமா?” என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

மேலும் பேசிய அவர் “எங்களைப் பொறுத்தவரை மருத்துவர் ராமதாஸ் நேற்றும் கடவுள் தான், இன்றும் கடவுள் தான், நாளையும் கடவுள் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், எங்களுக்கு நல்வழி காட்டாமல் எங்களது கடவுள் திடீரெனச் சென்று கதவைச் சாத்திக் கொண்டாரே என்பதுதான் எங்கள் வருத்தம். அந்த கதவை அவரே சாத்திக் கொண்டாரா அல்லது சாத்தப்பட்டதா என்பதுதான் எங்களுக்குத் தெரியவில்லை. நாளை வரும் பாமக நிர்வாகிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே எங்களின் அடுத்தகட்டப் பயணம் தொடரும்” என்று தெரிவித்தார்.

பாமகவின் உட்கட்சிப் பூசல் குறித்த முன்னாள் பாமக எம்.எல்.ஏ அருளின் இந்த பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share