லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
நெடுஞ்சாலைத் துறையில் சுமார் ரூ. 3.23 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று (ஜூலை 15) ஆஜரானார்.
சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ”ஏற்கனவே நாட்டில் என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். சிங்கப்பூரியில் சிகிச்சைப்பெற்று வந்தபோது, விமானநிலையத்தில் உங்களைச் சந்தித்து, காவல்துறை அழைக்கும் போது கட்டாயம் செல்வேன் என்று சொன்னேன்.
அதுபோல ஜூலை 15ஆம் தேதி காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் காவல்துறை அடிஷனல் சூப்பிரண்டு, இன்று விசாரணைக்கு வர வேண்டும் என்று எனக்கு கடிதம் கொடுத்தார்.
எனவே இன்று காலை 10.45 மணிக்கு இந்த வளாகத்திற்கு வந்தேன். 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. இப்போது நான் வெளியே வரும் வரை விசாரணை நடந்தது. பல்வேறு கேள்விகணைகளை தொடுத்தார்கள்.
என்னை பொறுத்தவரை முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். எனவே என் மனதில் பட்டதை முழுமையாக பதிலளித்திருக்கிறேன். 100 சதவிகிதம் உண்மையை சொல்லியிருக்கிறேன். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறேன். நீதிமன்ற ஆணையை ஏற்று எனது பதிலை சொல்லியிருக்கிறேன்.
மீண்டும் எப்போது அழைத்தாலும் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிற காரணத்தினால் இதற்கு மேல் என்னால் விரிவாக பதிலளிக்க முடியாது.
வருகிற ஜூலை 28ஆம் தேதி நீதிமன்ற வழக்கு இருக்கிறது. நான் நீதியை எதிர்பாத்திருக்கிறேன்.
இவர்கள் வெறும் அம்புதான். எய்தவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். காவல்துறை மீது என்றுமே கோபித்துக்கொள்ளக் கூடாது. இரண்டு மாதத்துக்கு முன்னால் திமுக ஆட்சியில் இருந்தவர்கள் தான் இந்த காவல்துறையினர். காவல்துறை எப்போதுமே இருக்கும்.
விசாரணையின் போது, நான் பதில் சொல்ல சொல்ல கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டார்கள். இது வழக்கமானதுதான்” என்றார்.
