செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டதற்கான பில் தொகையை முடித்துக் கொடுப்பதற்காக, ஒப்பந்ததாரர் நவீன் என்பவரிடம் மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி தனது அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த வீராசாமி, தான் லஞ்சம் வாங்கவில்லை என்றும், ஒப்பந்ததாரர் நவீனுக்கு ஏற்கனவே கொடுத்திருந்த கடன் தொகையைத்தான் திரும்பப் பெற்றதாகவும் தெரிவித்தார்.
கட்சித் தலைமை அதிரடி நடவடிக்கை:
பணப் பரிமாற்றம் தொடர்பான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வீராசாமி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.வி.தினகரன் (தீனா) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்த வீரா (எ) வீராசாமி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
