‘ஆபாச மெசேஜ்’ தவெக எம்.எல்.ஏ.: சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி திமுக வழக்கு!

By Mathi

|

Published on 26 Nov 2026, 4:00 PM

Kanimozhi NVN Somu Seeks CBI Probe TVK MLA Case

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நியாயமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

5 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு

இந்த நிலையில் நவம்பர் 23-ந் தேதி முறைப்படி புகார் பெறப்பட்டு, அருள் விக்னேஷ் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக நவம்பர் 24-ந் தேதி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் ஐபிஎஸ்ஸை நியமித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், அவரது விசாரணையை காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜி என்.காமினி கண்காணிக்கவும் உத்தரவிட்டார். மேலும், டிசம்பர் 22-ந் தேதிக்குள் இந்த வழக்கின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

விசாரணைக்கு ஆஜராக சம்மன்

நவம்பர் 25-ந் தேதி ஸ்ருஷ்டி சிங் தமது விசாரணையைத் தொடங்கினார். அருள் விக்னேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் வழங்கினர். காவல்துறை விசாரணை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூத்த ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட உள்ளகப் புகார்கள் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது.

திமுக வழக்கு

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு வெளியான நிலையில் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; ஆளும் கட்சி என்பதால் எம்.எல்.ஏ.வை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்; பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக புகார் கூறப்படும் நிலையில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; ஆகையால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என கனிமொழி என்.வி.என்.சோமு தமது மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி ஆளுநர் அர்லேகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel