கோவையில் ரோபோ மற்றும் ட்ரோன் LED ஸ்கிரீன் மூலம் தவெக வேட்பாளர் வாக்கு சேகரித்து வருவது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவரான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் கட்சியின் தலைவரான விஜய் பிரச்சாரத்திற்கு செல்வதில் சிக்கல் உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், கோவை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் செந்தில்குமார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அவர் ரோபோ, ட்ரோன் எல்இடி ஸ்கீர்ன் ஆகியவற்றை கொண்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வாக்கு சேகரித்து வருகிறார்.

கோவை காமராஜபுரம் பகுதியில் மாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் ட்ரோன்கள் மூலம் எல்.இ.டி திரையை பறக்க செய்து அதில் அவரது புகைப்படத்தையும், தமிழக வெற்றிக் கழகம் வீடியோக்களை ஒளிபரப்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரோபோ ஒன்றை கொண்டு வந்து அதற்கு தவெக துண்டுகளை போட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரோபோவை பார்த்த சிறுவர் சிறுமிகள் பொதுமக்களும் ஆர்வமுடன் ரோபோ உடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
