நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று திருப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். நீங்கள் எல்லோரும் இந்த விஜயை 100 சதவீதம் நம்பலாம். வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன். என தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டலத் தங்கங்களே! திருப்பூர் பகுதி மக்களே என தனது பேச்சை தொடங்கினார்.
நாளை மறுநாள் நமது தேர்தல் வாக்குறுதிகளை ஒரு புத்தகமாக வெளியிடுகிறோம். அதற்கு முன் இங்கு சில விஷயங்களைப் பேசிவிட்டுப் போகிறேன்.நெசவாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், விவசாயிகள் மற்றும் காவல்துறையினர் சம்பந்தமான சில முக்கிய அறிவிப்புகளை வாசித்தார்.
நெசவாளர்களுக்கான வாக்குறுதிகள்:
நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்காக அரசுக்கு சொந்தமான ஒரு உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். மேலும், முக்கிய நகரங்களில் ‘வெற்றி தறி’ விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
நிலையற்ற நூல் விலை மற்றும் மின்சார நெருக்கடியின் சுமையைப் பகிர்ந்துகொள்ள, கைத்தறி மற்றும் விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.30,000 வங்கி மூலம் நேரடியாக தவெக அரசு வழங்கும்.
கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 500 யூனிட்டாகவும், விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 1,500 யூனிட்டாகவும் உயர்த்தப்படும்.
நெசவாளர்களின் உற்பத்திச் செலவுகளைக் குறைக்க, அவர்கள் பயன்படுத்தும் நூல், சாயங்கள் மற்றும் ரசாயனங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான வளர்ச்சி திட்டங்கள்:
லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறை. இந்தியாவில் அதிக அளவில் MSMEs இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. ஆனால், இந்தியாவிலேயே அதிக அளவில் MSMEs மூடப்பட்டதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ‘பெருமையை’ உருவாக்கியது திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை” என்று விமர்சித்த விஜய், தவெக ஆட்சியில் செய்யவிருக்கும் திட்டங்களை விளக்கினார்.
நெருக்கடியில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ரூ.15,000 கோடி ஸ்டேட் கிரெடிட் காரண்டி ஃபண்ட் உருவாக்கப்படும்.
ஜவுளி துறை உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பாதிக்கும் ‘பீக் அவர்ஸ்’ மின் கட்டணத்தை தவெக அரசு நிறுத்தி வைக்கும். விரிவான ஆய்வுக்குப் பிறகு மின் கட்டணம் முறைப்படுத்தப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 100% மின்சார வரி விலக்கு பெறும்.
உலக அளவில் போட்டியிடும் வகையில் அவற்றை நவீனமயமாக்க, ஒரு யூனிட்டுக்கு ரூ.50 லட்சம் என்ற அளவில் 35 சதவீதம் நேரடி மூலதன மானியம் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கான வாக்குறுதிகள்:
5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படும்.
நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும்.
‘உழவர்களின் தோழன்’ திட்டத்தின் கீழ் குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.10,000 நேரடி முதலீட்டு ஆதரவுத் தொகை வழங்கப்படும்.
100% பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயிர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
அரசு ஊழியர்கள் & காவல்துறையினருக்கான திட்டங்கள்:
அரசு ஊழியர்களின் நலனுக்காக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து தவெக அரசு கனிவுடன் பரிசீலித்து மதிப்பீடு செய்யும்.
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ச்சியாக அரசுப் பணியை நிறைவு செய்துள்ள அனைத்து தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் எழுத்தர் பணியாளர்களை டிவிகே அரசு பணி நிரந்தரம் செய்யும்.
பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரத்தை தவெக அரசு முடிவுக்குக் கொண்டு வரும்.
அனைத்து அரசு ஊழியர்களின் இடமாற்றங்களும் வெளிப்படையான மற்றும் கால வரையறைக்கு உட்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூ.18,200 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.
அதிக மன அழுத்தம் உள்ள பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு மாதம் ரூ.1,000 பணிப் படியாகக் கூடுதலாக வழங்கப்படும்.
காவலர் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டம் இயற்றப்படும். இதன் மூலம் பணி நேரங்கள் முறைப்படுத்தப்படும்.
அதிக வேலைச் சுமை கொண்ட காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு சுழற்சி முறை விடுமுறை உறுதி செய்யப்படும்.
சலவைப் படியை ரூ.500 இலிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.
மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் காவலர் நல மருத்துவமனைகள் நிறுவப்படும்.
பெண் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நெறிமுறை அல்லது பாதுகாப்புப் பணிகளுக்கு பணியமர்த்தப்பட மாட்டார்கள்.
பெண் காவல்துறை பணியாளர்களுக்கு தனி ஓய்வறைகள் மற்றும் நடமாடும் டாய்லெட் யூனிட்டுகள் அமைக்கப்படும்.” என தனது திட்டங்கள் குறித்து பேசினார்.
இறுதியாக பேசிய விஜய், “நீங்கள் எல்லோரும் இந்த விஜயை 100 சதவீதம் நம்பலாம். நான் உங்களுக்காக மட்டும்தான் வந்துள்ளேன். உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்த மட்டும்தான் வந்துள்ளேன். வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன். ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று உறுதியளித்தார்.
ரோடு ஷோ ரத்து
இதைத்தொடர்ந்து பெருமாநல்லூரில் இருந்து பூலுவப்பட்டி வரை விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதிக கூட்டம் காரணமாக காவல் துறை வேண்டுகோளை ஏற்று ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜயை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
