ADVERTISEMENT

கடும் வெயிலில் விஜய் பிரச்சாரம்: தவெக வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் மயக்கம் .. 5 சவரன் செயின் பறிப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

கொளுத்தும் வெயிலில் விஜயைப் பார்க்க ஏராளமான மக்கள் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இன்று காலை முதல் காத்திருக்கின்றனர். அப்பகுதியில் கடும் வெயில் காரணமாக 10 பேர் வரை மயக்கமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று (ஏப்ரல் 14) திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக, தனி விமானம் மூலம் கோவை வந்த விஜய், சாலை மார்க்கமாக திருப்பூர் புறப்பட்டார். கோவை விமான நிலையத்துக்கு வந்த விஜய்க்கு ஏராளமான மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, விஜயின் வாகனம் கணியூர் சுங்கச் சாவடி அருகே வந்தபோது, அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தொண்டர்களும் திரண்டு விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தவெக வேட்பாளர் மயக்கம்

விஜயை வரவேற்க சூலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சுகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கிய சுகுமார் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவருக்கு அருகில் இருந்த ஆம்புலன்ஸில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சூலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ADVERTISEMENT

செயின் பறிப்பு

இந்த கூட்ட நெரிசலில், அப்பகுதியில் இருந்த கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஐந்து சவரன் தங்கச் செயின் திருட்டு போனது. நகை திருடு போனது குறித்து அந்தப் பெண் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

காவலர்கள் அவரை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். செயினைப் பறிகொடுத்த அந்தப் பெண், வீட்டிற்கு தெரியாமல், குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல், விஜயைப் பார்க்கும் ஆர்வத்தில் வந்திருந்தது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

விஜயின் வருகை காரணமாக சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடி அருகே வாகனங்கள் சுமார் 20 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் வாகனங்களில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதைத் தொடர்ந்து விஜய் அவிநாசி சென்று அங்கு ரோட் ஷோ நடத்திய பின்னர், பெருமாநல்லூர் பகுதியில் நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், கொளுத்தும் வெயிலில் விஜயைப் பார்க்க ஏராளமான மக்கள் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இன்று காலை முதல் காத்திருகின்றனர். அப்பகுதியில் கடும் வெயில் காரணமாக 10 பேர் வரை மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

வெயில் கடுமையாக இருக்கும் நேரத்தில் விஜய் பிரச்சாரத்துக்கு வருவதால், அவரை பார்க்க வரும் பொதுமக்களும் அவரது ரசிகர்களும் தொடர்ந்து அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share