ரூ.10,000 காசோலை போன்று துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்த அதிமுகவினருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள முடியும். இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே அதிமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில் ரூபாய் 10,000 எனக் குறிப்பிட்டு காசோலை வடிவில் வடிவமைக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை அதிமுகவினர் விநியோகித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் கோவை உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் போக்கும் ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரவடிவேல் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அதில், ரூ.2000 மற்றும் ரூ.10,000 எனக் குறிப்பிட்டுள்ள காசோலை மாதிரிகள் விநியோகிக்கப்படுகின்றன. அதாவது அதிமுகவுக்கு வாக்களித்தால் பண பலன்கள் கிடைக்கும் என மக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இது தவறானது. இது போன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால் தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள்.
எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். காசோலை மாதிரிகளை போன்ற துண்டு பிரசுரங்களை விநியோகிக்க தடை உத்தரவை பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
