மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய பிரகாஷ்ராஜ், “பி.டி.ஆர். பழனிவேலு தியாகராஜன் எனது நண்பர் என்பதற்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்பதால்தான் நான் இங்கு வந்துள்ளேன்.
நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்டாக வேண்டும், மிஸ்டர் சுந்தர். நீங்கள் ஒரு சினிமா டைரக்டர், பரவாயில்லை. அரசியலுக்கு வாருங்கள். ஆனால் எப்படி வந்தீர்கள்?மூன்று நாட்களுக்கு முன்பு வரை ஷூட்டிங் செய்து கொண்டிருந்தீர்களா இல்லையா? திடீரென்று நீங்கள் கேண்டிடேட் என்று அறிவித்தவுடன் நீங்களே ஆச்சரியப்பட்டீர்களா இல்லையா? மூன்று நாட்களுக்கு முன்பு வரை மதுரை மக்களுக்காக, தமிழ்நாட்டுக்காக, இந்திய அரசியலுக்காக எந்தப் பிரச்சினையிலும் நின்று பேசாமல், “நான் சிறந்த டைரக்டர்” என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள், மூன்று நாட்களுக்குப் பிறகு உங்களை வேட்பாளராக அறிவித்தவுடன், துண்டைப் போட்டுக்கொண்டு “நாளையிலிருந்து நான் எம்எல்ஏ ஆகப் போகிறேன்” என்று வந்துவிடுவீர்களா?மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?
இதை இன்னும் தெளிவாகச் சொல்லலாம். நீங்கள் எந்தக் கட்சி? புதிய நீதி கட்சி என்று ஒன்று இருந்தது. அதில் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அதில் உங்கள் கொள்கை என்ன?அது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. ஏனென்றால் பாஜக நேராக வந்தால் இங்கு ஜெயிக்க முடியாது அல்லவா? அதற்கு இரண்டு சீட் கொடுத்தார்கள். அந்த இரண்டில் திடீரென மூன்று நாட்களுக்கு முன்பு வரை சூட்டிங்கில் இருந்த உங்களுக்கு எப்படி சீட் கொடுத்தார்கள்? யானை மாலை போட்ட கதை போல நீங்கள் வந்துவிட்டீர்கள்.
ஒரு டைரக்டர் ஆவதற்கு எத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டிருப்பீர்கள்? ஒரு ஆளும் கட்சி என்றால் நிறை குறைகள் இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுவீர்களா? நிறைகளை கொண்டாட மாட்டீர்களா? இது என்ன அரசியல்?
ஆனால் இது மட்டும் அரசியல் அல்ல.இதைவிட, உங்கள் மனைவி பரவாயில்லை. 10 வருடங்களாக மூன்று கட்சிகளைத் தாண்டி ஏதோ கேள்வி கேட்டுக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு கிடைக்காத எம்எல்ஏ சீட் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று யோசிக்க மாட்டீர்களா? மதுரை மக்களை நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? யாரைப் பற்றி பேசுகிறீர்கள்? பி.டி.ஆரைப் பற்றியா?
நான் பல மாநிலங்களில் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்று இந்தியாவிற்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைப் பிடிஆர் பேசினால் அவருடைய அறிவையும், அவரது விஷனையும் இந்தியா முழுவதும் பார்க்கிறது. “ஏதோ வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தார்” என்று சொல்வதற்காக வந்த உடனே “வா, அவர் எம்எல்ஏ ஆனார்” அப்படி சொல்ல முடியுமா? எத்தனை ஆண்டுகள் வேலை செய்தார்? அமைச்சராக எத்தனை விஷயங்களைப் பேசியுள்ளார்? இன்று எல்லா கட்சிகளும் இந்திய அரசியலில் திரும்பிப் பார்க்கும் அரசியல்வாதியாக பி.டி.ஆர் இருப்பது மதுரையின் பெருமை.
பி.டி.ஆர் அமைச்சராக இருந்தார். இந்த இந்தத் திட்டங்களைச் செய்தார் என்ற ரெக்கார்டு உள்ளது. உன்னுடைய ரிசிப்ட் எங்கே? எதை நம்பி என் நாட்டை உன் கையில் கொடுப்பது? எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. மாற்றம் வேண்டும். மாற்றம் மட்டும்தான் மாறாதது. ஆனால் எந்த மாதிரியான மாற்றம்? ஏமாற்றமாகி விடக்கூடாது அல்லவா? முன்னேற்றத்திற்கான மாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இது சீரழிவு. அதை எப்படி ஏற்றுக்கொள்வது?
சுந்தர் சி பேசின தரம் என்ன? யாரைப் பற்றி பேசுவது என்பதை யோசிக்க வேண்டும். அந்தப் பேச்சைக் கேட்டுவிட்டுத்தான் நான் “பி.டி.ஆர் உங்களுக்கு எல்லாம் அந்தத் தரமான பேச்சு வராது. நான் வந்து பேசுகிறேன்” என்று சொன்னேன்.
நான் எனக்காகப் பேச மாட்டேன். மக்களுக்காக, மக்களோடு நின்று பேசுவேன் என்றேன். இது திமுகவுக்கோ, அதிமுக அணிக்கோ நடக்கும் தேர்தல் இல்லை. இது விஜய் சொல்வது போல் டிவிகே வுக்கும் திமுகவிற்கு நடக்கும் தேர்தலும் அல்ல. இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையில் நடக்கும் தேர்தல். தன்மானத்திற்கு நடக்கும் தேர்தல். சுய ஆட்சிக்கு நடக்கும் தேர்தல். மாநில உரிமைகளை காப்பாற்றுவதற்கான தேர்தல். மதுரை வீரமான மண் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைச் செய்து காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
