விஜய் நடித்தால் தொண்டைக்குள் விரலைவிட்டு விஜய் என்போம். ஆனால் நாட்டை எப்படி கொடுப்பது. வந்தவுடன் சி.எம் என்றால் அது லாட்டரி சீட்டா என்று காட்டமாக விமர்சித்தார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து பேசுகையில், “நானும் ஒரு நடிகன் தான். என்னையும் “செல்லம்” என்று கூப்பிடுகிறீர்கள். ஆனால் அதை நான் ஓட்டுக்கு பயன்படுத்த மாட்டேன். நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் அன்பு எனது திறமைக்கு என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அரசியலுக்கு வர வேண்டும் என்றால், மக்களைப் பற்றிய விஷயங்கள் தெரிய வேண்டும். அப்படி எதுவுமே தெரியாமல், தனது செல்வாக்கை வைத்து விஜய் வருகிறார். விஜய் வர வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அவர் மீது உள்ள வெறுப்பிலோ, பகை உணர்விலோ இப்போது நான் பேசவில்லை. நான் மக்களுக்காக, மக்களில் ஒருவனாக சில கேள்விகளை மட்டும்தான் கேட்கிறேன். அந்தக் கேள்விகள் கேட்கக் கூடாது என்று நீங்கள் சொல்ல முடியாது.
எனக்கு யார் இங்கு ஆள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். என்னைப் பாதுகாப்பாக யார் வைத்துக் கொள்வார்கள் என்பதும் மிகவும் முக்கியம். நீங்கள் இன்று சினிமாவில்வரும்போது, நன்றாக ஐந்து நிமிடம் டான்ஸ் ஆடுகிறீர்கள். அந்த ஐந்து நிமிட டான்ஸுக்காக நீங்கள் எத்தனை வருடங்கள் பயிற்சி செய்திருக்கிறீர்கள்? சினிமாவுக்கு வருவதற்கு முன்பு டான்ஸ், சண்டை, நடிப்பு என அனைத்தையும் கற்றுக்கொள்கிறீர்கள். முதல் இரண்டு படங்களில் இருந்த விஜய் இப்போது இருக்கும் விஜய் கிடையாது அல்லவா? அந்த அளவிற்கு செல்வாக்கு, பெயர், அன்பு சம்பாதித்துள்ளீர்கள்.
நீங்கள் இதற்கு மேல் நடித்து ஆஸ்கர் வாங்கினால் சந்தோஷப்படுவது நான் தான். நீங்கள் நடித்துக் கொண்டிருந்தால் தொண்டைக்குள் விரலை விட்டு விஜய்” என்போம். ஆனால் நாட்டை எப்படிக் கொடுப்பது? நான் உங்கள் கையில் ஒரு நாட்டை கொடுப்பதற்கு, எந்த வகையில் நீங்கள் எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளீர்கள்?
இருக்கும் எல்லோரிடமும் “விஜய் வந்திருக்கிறேன், எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்” என்று சொல்கிறீர்கள். ஆனால் அது வெறும் பேச்சாக உள்ளது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு எதற்காக வந்திருக்கிறீர்கள்?காந்தி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தார் என்றால் நான் நம்புகிறேன். அதற்கு ஒரு வரலாறு உள்ளது. இப்படி எத்தனையோ பெரிய பெரிய தலைவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கீழே இறங்கி, அடிபட்டு, மக்களுக்காகப் பேசிப் பேசி நம் நம்பிக்கையை வாங்கியுள்ளனர். அப்படிப்பட்ட தலைவர்களால்தான் இந்த நாடு வளர்ந்துள்ளது.
நீங்கள் ஒரு ஐந்து வருடம் எதிர்க்கட்சியாக இருந்தால் உங்களுக்கு எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள்? என்பது தெரிய வேண்டாமா.. உங்கள் டிரைவரின் பையனை எம்எல்ஏ ஆக்குகிறீர்கள் என்றால் எப்படி?
இன்று நான் இங்கு வந்து பேசுவதற்குக் காரணமான தகுதி எனக்கு எப்போது வந்தது? நான் பத்து ஆண்டுகளாக அரசியல் பேசிக்கொண்டே இருக்கிறேன். பத்து ஆண்டுகளாக மக்களுக்காக, மக்களோடு மக்களாக நின்று பேசிப் பேசி, புதிதாகப் புரிந்துகொண்டே சென்று கொண்டிருக்கிறேன். அந்த மாதிரியான தேடல் உங்களுக்கு வேண்டாமா? வந்த உடனே “நான் சிஎம், எனக்கு பவர் கொடுத்துவிடுங்கள்” என்றால் எப்படி கொடுக்க முடியும்? அது என்ன லாட்டரி சீட்டா? குலுக்கி போடுவதற்கு? ஒரு பொறுப்பு வேண்டாமா? ஒரு நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டாமா?
உங்களுக்கு பெரிய செல்வாக்கு உள்ளது. ஆனால் அது உங்கள் நடிப்பிற்கு. அது சும்மா வரவில்லை. ஆசைப்பட்டு, நேரத்தை செலவு செய்து, கட்டவுட் வைத்து, அதற்கு மேல் பால் ஊற்றி மாலை போட்டு, நம்ம காசை செலவழித்து வந்தது. அதை நாங்கள் கேட்கவில்லை. நீங்கள் அடுத்த சினிமா செய்தால் கூட நின்று பார்ப்போம். ஆனால் அரசியல் என்று வந்தால், நாட்டை உங்கள் கையில் கொடு என்றால், நான் சில கேள்விகளை கேட்க வேண்டியது எனது கடமை. ஒரு பொறுப்புள்ளவனாக மக்களுக்காக நான் பேச வேண்டாமா? மக்கள் கேட்கும் கேள்வியை நாங்கள் கேட்க வேண்டாமா?உடனே நீங்கள் “எங்களை வெறுக்கிறீர்கள் என்றால் எப்படி?” என கேள்வி எழுப்புகிறீர்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஸ்கூல் டீச்சர் ஆகிறேன் என்று சொன்னால் கூட அதற்கு ஒரு டிகிரி இருக்கிறதா என்று கேட்பார்கள். அந்த மாதிரி தான் நான் கேட்கிறேன் என தெரிவித்தார்.
