ADVERTISEMENT

ஸ்டாலினை அங்கிள் என சொன்னது போல ஜெயலலிதாவை சொல்வாரா? – பெரம்பூரில் விஜயை வெளுத்து வாங்கிய சத்யராஜ்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் திமுகவின் ஆர்.டி. சேகர் களம் காண்கின்றார். இன்று (ஏப்ரல் 18) அவருக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார்.

பிரச்சாரத்தில் பேசிய சத்யராஜ், “விஜயுடன் நான் தலைவா, மெர்சல், நண்பன் என 3 படங்கள் நடித்திருக்கிறேன். அவர் சின்னப் பையனாக இருந்ததிலிருந்தே தெரியும். அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னபோது எனக்கு ரொம்ப அதிசயமாக இருந்தது. தம்பி ரொம்ப reserved type-ஆச்சே. யாரிடமும் சரியா பேசாதவர். நாங்கள் எல்லோரும் ரொம்ப ஜோக் அடித்து சிரித்து பேசுவோம். அவருக்கு எப்படி அரசியல் செட் ஆகுமா என்று நினைத்தேன். அப்புறம் அரசியலுக்கு வந்து தைரியமாக கட்சி ஆரம்பித்து விட்டார்.

ADVERTISEMENT

கட்சி ஆரம்பித்த போது முதல் கூட்டத்தில், “என்னுடைய கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்” என்று சொன்னார். சூப்பர்ப்பா.. நம்ம ஆள்.. பிரமாதமாக சொல்றாரே.. என்று நினைத்தேன். இப்படித்தான் ஒரு ஆள் வரணும். ஏனென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு போட்டி என்றால் சித்தாந்த ரீதியாக, சமூக நீதிக்குள்ளேயே இருக்கும் ஒரு போட்டியாக அது இருக்க வேண்டும் என்று நான் ரொம்ப ஆசைப்பட்டேன்.

என்னையா.. பிரமாதமா கொள்கைத் தலைவர்கள் அம்பேத்கர், பெரியார்னு சொல்லிட்டார். இளைஞர்களிடம் எல்லாம் இந்த மாபெரும் சித்தாந்தத்தை தம்பி கொண்டு போய்ச் சேர்க்கிறாரே? என்று எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நாம் நினைத்தது மாதிரி இல்ல. அவர் அரசியலுக்கு வந்தது சரிதான் என்று ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

ADVERTISEMENT

ஆனால் பேசப் பேச என்ன ஆச்சுன்னா, கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் நமது தமிழ்நாடு முதலமைச்சரை முதலில் “ஸ்டாலின் சார்”ன்னு சொன்னார். அடுத்தது “ஸ்டாலின் அங்கிள்”ன்னு சொல்லிட்டாரே. எனக்கு பயமும் ஆகிடுச்சு. என்னடா, எல்லோரையும் மரியாதையாக பேசும் ஒருத்தர், நம்ம முதலமைச்சரை “ஸ்டாலின் அங்கிள்”ன்னு சொல்லிட்டாரே. நம்ம பார்த்த விஜய் இப்படி இல்லையே. நம்ம பார்த்த விஜய் வேற மாதிரிதானே. அவர் தன் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரக்கூடாது என்பதற்காக பாடுபடுகிற ஒரு நல்ல நடிகராச்சே. ஆனால் அவர் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் ஒரு தமிழ்நாடு முதலமைச்சரை “ஸ்டாலின் அங்கிள்”ன்னு சொல்லிட்டாரே என்று நினைத்தேன்.

ஏனென்றால் முன்னாடி இந்தத் தலைவா பிரச்சனை வந்தப்போ கொடநாட்டில் போய் ஜெயலலிதா மேடத்தைப் பார்க்கிறதுக்காக, “அம்மா அம்மா, ரொம்ப மன்னிச்சுக்குங்கமா. எப்படியாச்சும் எங்க தலைவா படத்தை ரிலீஸ் பண்ணிவிடுங்கம்மா”ன்னு மரியாதையாக பேசினாரே. நான் அது மாதிரிதான் மரியாதையாக பேசுவார்னு நினைச்சேன். ஆனால் “ஸ்டாலின் அங்கிள்”ன்னு சொல்லிட்டாரு.

ADVERTISEMENT

யோசிச்சுப் பாருங்க… “ஸ்டாலின் அங்கிள்”ன்னு சொன்னாரு. ஏமாந்து போய் ஜெயலலிதா மேடத்தை “ஜெயலலிதா ஆண்ட்டி” ன்னு சொல்லி இருந்தால் என்ன நடந்திருக்கும்?

நம்ம பார்த்திருக்கோம்ல… இந்த ரோடு ஓரத்துல கொத்து பரோட்டா எப்படி போடுவாங்க? நங்கு நங்குன்னு கொத்து பரோட்டா போட்டு, அதுல முட்டை எல்லாம் கலந்து ஒரு கொத்து பரோட்டா போட்டுருப்பாங்க.

ஜெயலலிதா ஆண்ட்டின்னு சொல்லி இருந்தார் என்றால், அதுக்கப்புறம் மேடையில் வந்து “நான் ரெடி தான், வரவா வரவா?” அதெல்லாம் பாட முடியாது. “ஜெயலலிதா ஆண்ட்டி”ன்னு சொல்லி இருந்தீங்கன்னா, நீங்க ஒரே ஒரு பாட்டுதான் பாடியிருக்க முடியும் — “தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா. நான் தொட்டுக்கிட சிக்கன் தரட்டா..” என்றுதான் பாடமுடியும்.

ஒரு மனுஷன், ஒரு தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தன்மையாக இருக்கிறார் என்பதற்காக நீங்க என்ன வேண்டுமானாலும் பாடலாம், பேசலாம் என்றால் எப்படி.

யாராச்சும் உங்களைப் பத்தி எதாச்சும் பேசினாலும் அவர்களை திட்டுவது.. இப்ப நான் இந்த சோஷியல் மீடியா எதையுமே பார்ப்பதில்லை. நான் போறதுக்குள்ள என்னை எல்லா கெட்ட வார்த்தையிலயும் திட்டுவாங்க — சென்னை கெட்ட வார்த்தை, பெரம்பூர் கெட்ட வார்த்தை, மதுரை கெட்ட வார்த்தை, கோயம்புத்தூர் கெட்ட வார்த்தை, நார்த் இந்தியா கெட்ட வார்த்தை… எல்லாம். ஏனென்றால் அவர்கள் முதலாளிகள்.. நார்த் இந்தியா.. டெல்லியில்தான் இருக்கிறாங்க. அதனால் அவங்க வீட்டில் எல்லாம் விசாரிச்சு திட்டுவாங்க. நமக்கு அதைப் பத்தி எல்லாம் கவலையே இல்லை. நம்ம எல்லாம் பெரியாரோட ஆளுங்க. இதுக்கெல்லாம் நம்ம கவலையே படமாட்டோம்.” என தெரிவித்தார்.

விஜய், நீங்கள் கரூருக்கு போனீர்கள். மாபெரும் கூட்டம் வந்தது. உங்களுக்கு அப்படித்தான் வரும். ஏனென்றால் நீங்கள் வேறு லெவலில் இருக்கிறீர்கள். உண்மையை நான் ஒத்துக்கொள்கிறேன். கூட்டம் வந்துவிட்டதா என்று கேட்டுவிட்டு வருவது ஒரு பிரபலத்தின் பழக்கம். நீங்கள் கரூருக்கு போனீர்கள். நீங்கள் கரூருக்கு போனபோது ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நீங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.

உண்மையிலேயே உங்களுக்கு தெரியாது. ஆனால் நீங்கள் திருச்சி ஏர்போர்ட் போகும்போது ஒரு பத்திரிகை ரிப்போர்ட்டர் வந்து கேட்டார், “சார், 30 பேர் செத்துப் போய்விட்டார்கள் சார்” என்று சொன்னபோது நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நீங்கள் அப்படியே உங்கள் ப்லைட்டை கேன்சல் செய்துவிட்டு, திருச்சியில் ஒரு ரூம் போட்டு தங்கியிருக்க வேண்டும். உடனே அங்கு போக முடியாது. மக்கள் எமோஷனலாக இருப்பார்கள். 41 பேர் இறந்து போனதால் ஒரு கோபத்திலும் வேகத்திலும் இருப்பார்கள். நீங்கள் திருச்சியில் ஒரு ரூம் போட்டு மூன்று நான்கு நாட்களோ, பத்து.. முப்பது நாட்களோ அங்கேயே தங்கியிருந்து, பின்னர் அந்த மக்களைப் போய் பார்த்துவிட்டுத்தானே சென்னை வந்திருக்க வேண்டும்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆக இருந்தால், திருச்சியை விட்டு போவாராங்க?

அங்க இல்லாமல் வந்து விட்டு, 20 நாட்கள் கழித்து “சிஎம் சார், உங்களுக்கு எங்களைப் பழிவாங்க வேண்டும் என்றால் வாங்குங்கள். எனது மக்களை விட்டு விடுங்கள்” என்று போடுகிறீர்களே… எப்படி நீங்கள் பிளேட்டை மாத்தி விடுகிறீர்கள்?

ஆனால் எங்கள் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் என்ன பேசினார்? “எந்தக் கட்சிக்காரரும் தன்னுடைய தொண்டர்கள், தன் கட்சிக்காரர்கள், பொதுமக்கள் இறக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். இதில் எந்தவிதமான தவறும் எந்தவிதமான கட்சியின் மீதும் கிடையாது. அவர்களுக்கு நேர்ந்த துயரத்திற்காக நாம் வருத்தப்பட வேண்டும். அந்தத் துயரத்தைத் தீர்க்கவும், களைவதற்கும் போராடுவோம்” என்று அவ்வளவு பெருந்தன்மையாகப் பேசினார்.

நீங்கள் யோசித்துப் பாருங்கள். அவர் எங்கே? நீங்கள் எங்கே? நீங்கள் திருச்சியிலேயே தங்கி விட்டு சொல்லியிருக்கலாம் — “ஸ்டாலின் சார், நான் இந்த ஹோட்டலில், இந்த நம்பர் ரூமில் தங்கியிருக்கிறேன். நீங்கள் வேண்டுமென்றால் வந்து என்னை ஏதாவது செய்யுங்கள். என் மக்களை விட்டு விடுங்கள்” என்று சொல்லியிருக்கலாம். ஆனால் நீங்கள் எப்படி எல்லாம் திசை திருப்புகிறீர்கள்?

நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டீர்கள். உங்களுக்கு பெரிய மாஸ் இருக்கிறது. ஆனால் சத்தியமாகச் சொல்கிறேன், இந்த மாஸ் எல்லாம் ஓட்டாக மாறாது. ஏனென்றால் மக்கள் அனைவருக்கும் தெரியும் — இந்த ஐந்து ஆண்டு காலத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்ன சாதித்திருக்கிறது என்று. குறைகள் இருக்கலாம், விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் மிகச் சிறப்பான ஆட்சி ஸ்டாலின் ஆட்சிதான். தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.விஜய், உங்களுக்கு பயங்கர கூட்டம் வருகிறது. அப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை. ஆனால் என்ன மேட்டர் என்றால், நம்ம தல அஜித் வந்தால் இதைவிட பெரிய கூட்டம் வரும் என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share