நமது மின்னம்பலத்தில், “டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் போட்ட ‘ஆல் இந்தியா’ ஸ்கெட்ச்.. |அதிர்ந்த மோடி- அமித்ஷா! என நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை இதில் நாம் பதிவு செய்திருந்தோம்.
இது தொடர்பாக சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் சொல்லி இருந்த ‘ஆல் இந்தியா ஸ்கெட்ச்’ குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

சன் நியூஸ் முதன்மை செய்தி ஆசிரியர் மு.குணசேகரனின் முதல்வர் ஸ்டாலினுடனான உரையாடலில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:
கேள்வி: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக முதல்ல போர்க்கொடி உயர்த்தினது தமிழ்நாடு. நீங்க தான்..ஒரு பைனல் வார்னிங் அப்படின்னு சொன்னீங்க. அந்த சட்ட மசோதா நகல் வந்தவுடனே அதை எரிக்கவும் செஞ்சீங்க. ஒரு பெரிய கிளர்ச்சி வெடிக்கும் அப்படின்னு அறிவிச்சீங்க. அந்த சட்ட மசோதா தோல்வியடைந்து அதை கொண்டாடவும் செஞ்சிருக்கீங்க பட்டாசு வெடிச்சு. இந்த போராட்டம் பெருசா பண்ணனும்னு ஏன் நினைச்சீங்க? இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும்னு நீங்க எதிர்பார்த்தீங்களா? கிளர்ச்சி அறிவிச்சப்போ.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நானே வந்து கருப்பு சட்டை போட்டு, என்னைக்கு அறிமுகப்படுத்தினாங்களோ அன்னைக்கு காலையில தமிழ்நாடு முழுவதும் எல்லா தோழர்களும் கருப்பு சட்டை போட்டு கருப்புக் கொடி ஏத்தணும்னு சொல்லி அறிவிச்சுட்டு, நானே அப்போ நாமக்கல்ல இருந்தேன்.. நானே ஒரு இடத்துல போய் கட்சிக்காரங்க வீட்டுல கொடி ஏத்திட்டு சட்ட மசோதா நகலை எரிச்சேன். அதுக்கப்புறம் அதை பத்தி எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா இந்த மசோதா தோல்வின்னு செய்தி வந்தவுடனே தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்பட்டிருக்கு அப்படின்னு ஒரு மகிழ்ச்சி ஆயிருச்சு எங்களுக்கு.

கேள்வியாளர்: கிளர்ச்சி அறிவிச்சப்போ இவ்வளவு பெருசா இந்தியா முழுக்க எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுபடுவாங்க, இதைத் தடுத்து நிறுத்துறதுக்கு முன்னால வருவாங்கன்னு எதிர்பார்த்தீங்களா? மோடி கவர்மெண்ட் ஒரு ஃபெயிலியரை சந்திக்கும், டிபீட் ஆகும் இந்தப் பில்லுன்னு நினைச்சீங்களா?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அது என்ன நினைச்சாங்களோ இல்லையோ தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் நாங்க போராட முடிவு பண்ணிட்டோம். இது சம்பந்தமா ராகுல் காந்திகிட்ட பேசினேன், அன்னை சோனியா காந்திகிட்ட பேசினேன், காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே கிட்ட பேசினேன், அதுமட்டுமில்லாம அகிலேஷ்கிட்ட பேசினேன், மமதாகிட்ட பேசினேன், தெலுங்கானா முதலமைச்சர்கிட்ட பேசினேன், கேரளா சிஎம்கிட்ட பேசினேன். எல்லார்கிட்டயும் பேசி ஒருங்கிணைச்சோம். அதுமட்டுமில்லாம எங்களுடைய எம்.பிக்களும் மத்த எம்.பிக்களையும் காண்டாக்ட் பண்ணி அதையும் ஒரு லெவல்ல பண்ணோம். அதனால இது மோடியை பொறுத்தவரைக்கும் பெரிய தோல்வி, எங்களை பொறுத்தவரைக்கும் மகிழ்ச்சி.
கேள்வி: பொதுவா பிரதமர் கடிதம் எழுதினா ஒரு பதில் வர்றது, டைம் கொடுக்கிறது, இது பத்தி ஒரு கன்சல்டேஷன் முக்கியமான ஒரு பிரச்சனைன்னா கன்சல்ட் பண்ணறதுக்கு வாங்கன்னு முதலமைச்சர்களை அழைக்கிறது ஒரு மரபா இருக்கும். இதுல அது மாதிரியான எந்த கன்சல்டேஷனும் நடக்கலையே?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக மட்டும் இல்ல எந்த மாநில முதலமைச்சர்கிட்டயும் பேசல, எந்த கட்சித் தலைவர்கிட்டயும் பேசல. இதப் பத்தி ஒரு டிஸ்கஷனே கிடையாது. எவ்வளவு பெரிய விஷயம் இது. அதைப்பத்தி டிஸ்கஷனும் பண்ணாம திடீர்னு மசோதா கொண்டு வந்தது ஒரு பெரிய சர்வாதிகாரமா நடந்துக்கிட்டாங்க. அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சிருக்கோம்.
கேள்வி: பாஜக இதுல முன்வைக்கிற ஒரு விமர்சனம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர்றதுக்கு நாங்க சட்டம் கொண்டு வந்தோம், திமுக, காங்கிரஸ், இந்தியாவுல இருக்கிற எல்லா எதிர்க்கட்சிகளும் பெண்கள் முன்னேறுறதை விரும்பல, அதனால அந்த சட்டத்தை எதிர்த்துத் தோற்கடிச்சுட்டாங்க அப்படின்னு ஒரு பரப்புரையைச் செய்யறாங்க. இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்க பதில்?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பெண்களுக்கு இட ஒதுக்கீடுங்கிறது மூணு வருஷத்துக்கு முன்னாடி 2023-லேயே 33% இட ஒதுக்கீடு கொடுக்கணும்னு சொல்லி அப்பவே கொண்டு வந்தாச்சு இது. அப்பவே இதை அமலுக்குக் கொண்டு வந்திருக்கணும் அவங்க. ஆனா அதை தள்ளிப் போட்டாங்க, காலங்கடத்துனாங்க. அதை எல்லாருமே நாங்க ஆதரிச்சிருக்கோம். அந்த பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எல்லா கட்சியும் ஆதரிச்சிருக்கு, திமுகவும் மனப்பூர்வமா ஆதரிச்சிருக்கு. ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் 33% இட ஒதுக்கீடு மட்டும் இல்ல 50% இட ஒதுக்கீடு மாநகராட்சிகள்ல கொடுத்திருக்கோம், நகராட்சிகள்ல கொடுத்திருக்கோம், மேயர் பார்த்தீங்கன்னா 50%-க்கு மேல கூட தமிழ்நாட்டுல மேயர்கள் இருக்காங்க.
இப்போ டீலிமிடேஷனை கொண்டு வர்றதுக்காக ஒரு முகமூடியைத் தயார் பண்ணி அந்த முகமூடிக்காக இதை பயன்படுத்துறாங்களே தவிர வேற ஒன்னுமில்லை இது.
கேள்வி: இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில் கடந்த 10, 12 வருஷமா எந்த சட்டத்தைக் கொண்டு வந்தாலும் நரேந்திர மோடி அவர்களுடைய அரசு கொண்டு வந்தா அதை நிறைவேத்திருவாங்க. அது 370-ஆ இருக்கலாம், காஷ்மீரா இருக்கலாம், எதுவா இருந்தாலும் மெஜாரிட்டி இருக்கும்ன்னு நிறைவேத்திருவாங்க. ஆனா ஃபர்ஸ்ட் டைம் ஒரு பெரிய தோல்வியைச் சந்திச்சிருக்காங்க. இதுக்கு அரசியல் முக்கியத்துவம் என்ன?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சியுடைய ஒற்றுமை தான் இதனுடைய வெற்றிக்கு அடிப்படையா அமைஞ்சது. வட இந்தியா, தென் இந்தியான்னு சொல்லிப் பிரிக்கப் பார்த்தாங்க. ஆனா இதுல எல்லாரும் ஒற்றுமையா இருந்து அந்த வேறுபாடு பார்க்காம ஒற்றுமையா இருந்தனால தான் இந்த வெற்றியை நாம அடைஞ்சிருக்கோம். இதுல வந்து உத்தரப்பிரதேசத்துக்கு அதிகமான சீட் கிடைக்குது அப்படின்னு அகிலேஷ் யாதவ் ஏமாந்து போயிடல. அதுல இருக்கிற சூழ்ச்சியைப் புரிஞ்சிக்கிட்டு அவரும் இதைக் கடுமையா எதிர்த்தாரு. ஆனா இங்க இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி, மோடிக்கு சப்போர்ட் பண்ணாரு. அமித்ஷா சொல்றது தான் கரெக்ட், அதைத்தான் கேட்கணும் அப்படிங்கிற மாதிரி அவர் ஒரு பிரச்சாரம் பண்ணாரு. ஆக இது மோடியை பொறுத்தவரைக்கும் தோல்வி, எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரைக்கும் இது பெரிய துரோகம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
