டெல்லி பாஜகவிற்கு தமிழக மக்கள் யார் என்பதை காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. Delimitation சட்டத்திருத்தத்திற்கு எதிராகதமிழ்நாட்டில் நாளை எல்லோரும் கருப்பு கொடியை ஏற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி15) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோவில், “Delimitation என்ற பெயரில் தனது லிமிட்டை தாண்டி, பாஜக அரசு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது. வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் அதிகரித்து வழங்கும் வகையிலும், தென் மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையிலும் நடந்தால், தமிழ்நாடு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. ஒவ்வொரு குடும்பமும் தெருவுக்கு வந்து போராடும் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன்.
மாபெரும் அநீதி
யார் நல்லது சொன்னாலும் கேட்காத ஒன்றிய பாஜக அரசு, இதயும் கேட்கவில்லை. சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை முடக்கப் பார்க்கிறது. நாளை கொண்டு வரப்போகும் சட்டத் திருத்தத்தால், வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்குமான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடு ஏற்படும். பெயரளவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கும் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு சாதகமாக வட மாநிலங்களுக்கு மிக மிக அதிகமான தொகுதிகளை அதிகரித்து, நமது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கப் போகிறார்கள்.இதைத்தான் எங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சொல்கிறோம்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையா இது? தேச நலனுக்காகவும், தேச வளர்ச்சிக்காகவும் நாங்கள் துணை நின்றால், எங்களுடைய அரசியல் உரிமையைப் பறிப்பீர்களா? இதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?பிரதமர் மோடி அவர்களே, தமிழர்களையும் தென் மாநில மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்க்கிறீர்கள். டெல்லி பாஜகவிற்கு தமிழர்கள் யார் என்று காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கருப்புக் கொடி ஏற்றுவோம்
தமிழ்நாட்டின் குரல் வளையை நெரிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாளை நாடாளுமன்றத்தில் அவர்கள் கொண்டு வரும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அடையாளமாக, தமிழ்நாட்டில் உள்ள எல்லோரும் நமது வீட்டில் கருப்புக் கொடியை ஏற்றுவோம். கருப்புச் சட்டத்தை எதிர்த்து, நமது எதிர்ப்பின் அடையாளமாக கருப்புக் கொடியை ஏற்றுவோம்.
இந்தியாவை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் எதேச்சதிகார பாஜக அரசுக்கு எதிராக கருப்புக் கொடியை ஏற்றுவோம். இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று நான் சொன்னதை பாஜக தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது. நான் சொன்னதன் உண்மையான அர்த்தத்தை பாஜகவே உணர்த்திவிட்டது.அவர்களுக்கு தமிழ்நாடு முன்னேறிவிடக் கூடாது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒழிக்கப்படக் கூடாது. அதற்கான சதித்திட்டத்தை சட்டமாகவே கொண்டு வருகிறார்கள்.
சதியை எப்படி சட்டமாக ஏற்க முடியும்?கருப்புச் சட்டத்திற்கு எதிராக கருப்புக் கொடியை ஏற்றுவோம். ஒவ்வொரு வீட்டிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடியை ஏற்றுவோம். மீண்டும் எச்சரிக்கை செய்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை முடிவு செய்யக்கூடாது. கருப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கூடாது. 8 கோடி தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை இது. அரசியல் எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டின் உரிமையைக் காக்க, தமிழ்நாடு ஓங்கி ஒலிக்கட்டும். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். வெல்வோம் ஒன்றாக!” என தெரிவித்துள்ளார்.
