எது பழைய திமுக? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

ஸ்டாலின் பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே… அதுவா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்கும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Constituency Delimitation Bill) கொண்டுவர நாளை முதல் ஏப்ரல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இந்த அமர்வில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மக்களவையின் மொத்த பலத்தை தற்போதுள்ள 543-இலிருந்து 850 உறுப்பினர்களாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டால், எனது தலைமையிலேயே போராட்டம் நடைபெறும். 50, 60களில் இருந்ததைப் போன்ற பழைய திமுகவை இந்தியா திரும்பிப் பார்க்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில் , “தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில், சித்திரைத் திருவிழா இன்றே தொடங்கிவிட்டாற்போல் அதிமுக நல்லாட்சியை வரவேற்க உற்சாகத்தோடு கூடிநின்ற பொதுமக்களிடம் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.

என்னுடன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்றார்கள்.

ADVERTISEMENT

மதுரை பிரச்சாரத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இருந்தார்.

ஸ்டாலின் இன்றைய தினம் ஒரு வீடியோ வெளியிட்டதை செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்ததும், “ஏரியாவுக்கு வாய்யா, தெருவுக்கு வாய்யா, வீட்டுக்கு வாய்யா” என்று சவால் விட்டவர், கடைசியில் “மன்னிச்சுப்பா… ஒன்லி பில்டப் பா” என்று கதறும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வந்தது.

பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே… அதுவா?

பயத்தில் கண்டதை உளறும் மு.க.ஸ்டாலின்”என தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share