நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்கும் நோக்கில், ஒரு புதிய சட்டத் தொகுப்பைக் கொண்டுவர (Constituency Delimitation Bill) நாளை முதல் ஏப்ரல் 18-ந் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அமர்வில், தொகுதி மறுசீரமைப்பு மசோதா, 2026 தாக்கல் செய்யப்பட உள்ளது. இது 2002-ஆம் ஆண்டுச் சட்டத்தை மாற்றி, புதிய தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தை அமைக்க முன்மொழிகிறது. இது மக்களவையின் மொத்த பலத்தை தற்போதுள்ள 543-இலிருந்து 850 உறுப்பினர்களாக அதிகரிக்க உத்தேசித்துள்ளது.
இதனால் உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில் 120 முதல்140 இடங்களாக உயரும். பீகாரில் 40 தொகுதிகள் என்ற நிலை மாறி 75 முதல் 80 என அதிகரிக்கும். மகாராஷ்டிராவில் 48 தொகுதிகள் என்பது 72 முதல் 76 ஆக உயரும்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் என்பது 55 முதல் 59 ஆக மாறும்.
இப்படி மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை உயரும் நிலையில் நாடாளுமன்றத்தில் வட இந்திய மாநில எம்.பி.க்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பர். தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும்.
ஆகையால் இதனை கடுமையாக எதிர்த்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கு இது ஒரு “தண்டனை” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், ”தென் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கு நீர்த்துப்போகச் செய்யப்பட்டால், 1960-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைப் போன்ற மாபெரும் போராட்டங்களை தமிழ்நாடு முன்னெடுக்கும்” எனவும் முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதேபோல தெலுங்கானா ரேவந்த் ரெட்டி கூறுகையில், தென்னிந்தியாவை அரசியல் ரீதியாகப் பிரிக்கும் “சதி” என சாடியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”இந்த மசோதா இந்தியாவைப் பிளவுபடுத்தும் கருவி” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
