நாவை அடக்கிப் பேசுங்கள்!..நெருப்புடன் விளையாட வேண்டாம்! – முதல்வர் ஸ்டாலின் விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

stalin

பியூஷ் கோயல் தமிழ்நாட்டு பா.ஜ.க.வுக்கு மட்டும்தான் இன்-சார்ஜ். அதை மறந்துவிட்டு, அத்துமீறி வாய்க்கொழுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வேலூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கினார்.

ADVERTISEMENT

கூட்டத்தில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன், அணைக்கட்டு தொகுதியில் நந்தகுமார், வேலூர் தொகுதியில் கார்த்திகேயன், கே.வி. குப்பம் தொகுதியில் டாக்டர் ராஜேஸ்வரி , குடியாத்தம் தொகுதியில் பிரதாப் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

மேலும் பேசிய முதல்வர், எப்படிப்பட்ட நிலையில் நாம் இந்தத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும்! இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பசியும் வறுமையும்தான் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலையாக இருந்தது. அந்த அவலநிலையை மாற்ற வேண்டும் என்று இந்திய அரசு கொண்டு வந்ததுதான் குடும்பக் கட்டுப்பாடு திட்டம்! “அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்” என்று சொன்னார்கள். சொன்ன மாதிரியே, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும், இன்னும் சில மாநிலங்களும் அளவோடு பெற்று, வளமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட ஆரம்பித்திருக்கிறோம்.

ADVERTISEMENT

ஆனால், இப்போது ஒன்றிய அரசு என்ன பண்ணப் போகிறது என்றால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி நடைபோட்டதற்காகவே நம்மைத் தண்டிக்கப் பார்க்கிறார்கள். நடக்கப் போகும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான சதித் திட்டத்தைச் சட்டமாக நிறைவேற்றலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்… இன்றைக்கு மதியம் கூட இதுசம்பந்தமாக, பிரதமர் மோடி அவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறேன்.

தமிழ்நாடு என்பதை வெறும் மாநிலமாகவோ, நிலப்பரப்பாகவோ மட்டும் பார்க்கக் கூடாது! எட்டுக் கோடி தமிழ்மக்களின் உணர்வும், உரிமைக்குரலும்தான் தமிழ்நாடு! தமிழ்நாட்டின் குரல் வளையை நெரிக்க நினைத்தால் நாம் சும்மா இருக்கக் கூடாது!

ADVERTISEMENT

நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்து குறித்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கின்ற பாசிச, நாசகார வேலைகள் குறித்துப் பேசினால், “படிப்பறிவற்றவர்கள்” என்று சொல்லியிருக்கிறார் பியூஷ் கோயல் அவர்கள். மிகவும் திமிர்த் தனமாக நாவடக்கமின்றி பேசுகிறார்.

பியூஷ் கோயல் அவர்களே… நாவை அடக்கிப் பேசுங்கள்! நீங்கள் தமிழ்நாட்டு பா.ஜ.க.வுக்கு மட்டும்தான் இன்-சார்ஜ். அதை மறந்துவிட்டு, அத்துமீறி வாய்க்கொழுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்… இங்கு மரியாதை கொடுத்தால்தான், திரும்ப மரியாதை கிடைக்கும்! பா.ஜ.க. தமிழ்நாட்டை பற்றித் தவறாக எடைபோட்டுக் கொண்டிருக்கிறது!

பிரதமர் அவர்களே… உங்கள் முன்னால் கைகட்டிக்கொண்டு அடிமையாக இருக்கிறார்களே சிலர்… அவர்களை வைத்துத் தமிழ்நாட்டைக் குறைத்து எடைபோடாதீர்கள்… தமிழர்கள் அறிவானவர்கள் – சுயமரியாதைமிக்கவர்கள்! எங்கள் தன்மானத்தின் மீது கை வைத்தால், டெல்லியில் இருக்கும் உங்களது ஆணவத்துக்கு நாங்கள் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்கும்!

தமிழ்நாட்டுக்காக, தமிழினத்துக்காகப் போராட இப்போது யார் இருக்கிறார்கள்? தந்தை பெரியார் இல்லை; பெருந்தலைவர் காமராசர் இல்லை; பேரறிஞர் அண்ணா இல்லை; தலைவர் கலைஞர் இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், அது பெரிய தவறு! அவர்களது முழு உருவமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்! அவர்களது ஆற்றல் எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ரூபத்தில் என்கூட இருக்கிறது! கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும், தமிழ்நாட்டினது, தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான்! சண்டை செய்துகொண்டே இருப்பான்!

பிரதமர் அவர்களே… தமிழ்நாடு தனது இறுதி எச்சரிக்கையைக் கொடுத்தாச்சு! நெருப்புடன் விளையாட வேண்டாம்!” என்றார்.

மேலும் பேசிய முதல்வர்,”குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தார்கள்… வீதி வீதியாக சென்று, நம்மோடு வாழும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; நாம்தான் துணை நிற்க வேண்டும் என்று, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களிடமும் கையெழுத்துக் கேட்டு, கையெழுத்து இயக்கம் நடத்தி, பாதுகாப்பு தந்தது யார்? தி.மு.க.!

இதைக் கண்டித்து இந்த ஸ்டாலின் தலைமையில் மாபெரும் ஊர்வலம் சென்றோம். அதற்காக, என் மீதும், என்னுடன் வந்த எட்டாயிரம் பேர் மீதும் F.I.R. போட்டார்கள். போட்டது யார்? பச்சோந்திக்கே டஃப் கொடுத்துக் கலர் மாறுகிறாரே அந்த பழனிசாமிதான்!

அதுமட்டுமா, பழனிசாமி அ.தி.மு.க. என்னவெல்லாம் செய்தது? C.A.A. சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது. மாநிலங்களவையில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்திருந்தால், இந்தச் சட்டமே வந்திருக்காது. ஆதரித்து வாக்களித்தது மட்டுமல்ல, இந்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என்று கொச்சைத்தனமாக கேள்வி கேட்டார் பழனிசாமி! இவரது துரோகத்திற்குச் சிறுபான்மையின மக்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கியதும்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வைப் பிரிந்த மாதிரி ஒரு கபட நாடகம் போட்டார்… அதோடு, கூட்டணித் தர்மத்துக்காகத்தான் இந்தச் சட்டங்களை ஆதரித்தோம் என்று கதை சொன்னார்.

ஓநாய் எதற்கு அழும் என்று எல்லோருக்கும் தெரியும்தானே? அதனால் மக்கள் என்ன செய்தார்கள். பழனிசாமியின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்க முடியாது என்றுதான், பத்து தோல்வி பழனிசாமி என்று ஒரு பட்டத்தைக் கொடுத்தார்கள்! இதிலிருந்தாவது பழனிசாமி பாடம் கற்றுக்கொண்டாரா? மறுபடியும் பா.ஜ.க.வைத் தோளில் சுமந்துகொண்டு வருகிறார்.

அண்மையில் நாகப்பட்டினத்தில் பேசிய பழனிசாமி, இன்னொரு அரிய முத்தை உதிர்த்திருக்கிறார். என்ன தெரியுமா? “எங்களுக்குக் கூட்டணி வேறு… கொள்கை வேறு” என்று பேசியிருக்கிறார்.

பழனிசாமி அவர்களே… அப்படி என்னதான் உங்களிடம் கொள்கை இருக்கிறது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் கேட்போம்…

“காலைப் பிடி, காலை வாரு, முதுகில் சவாரி செய்து முதுகைக் குத்து!” இதுதானே உங்கள் கொள்கை! கட்சியின் பெயரில் இருக்கும் திராவிடம் என்றால் என்ன என்று கூடத் தெரியாது என்று சொன்னவர்தானே நீங்கள்! உங்களுக்குத் திராவிடமும் தெரியாது. அண்ணாவும் தெரியாது! அதனால்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பழனிசாமியை அரசியல் அவமானமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது!

அப்படிப்பட்ட பழனிசாமியை முகமூடியாகப் பயன்படுத்திக்கொண்டு ‘டபுள் எஞ்சின்’ என்ற பெயரில், N.D.A. ஆட்சி என்ற பெயரில் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்று பா.ஜ.க. திட்டம் போடுகிறது. அ.தி.மு.க. வெற்றி பெற்றால், அது N.D.A. ஆட்சியாகத்தான் இருக்கும் என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்… ஆனால், தமிழ்நாட்டு மக்களிடம் மோடி மஸ்தான் வேலையும் எடுபடாது; அடிமைசாமியின் அடகு வைக்கும் வேலையும் நடக்காது!

ஏனென்றால், தமிழ் மக்களுக்குள் இருப்பது, அகர முதல தொட்டுத் தாடிக் கிழவன் பிளட்டு! அறிஞர் அண்ணா பிளட்டு! தலைவர் கலைஞர் பிளட்டு!

நமது திராவிட மாடல் ஆட்சியில் சதிகளை முறியடித்துச் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறோம்! அடிமைத்தனத்தை ஒழித்து, அதிகார மிரட்டல்களைத் தவிடுபொடியாக்கி, அன்பால் மக்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்! வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; கோடிக்கணக்கான தமிழ் மக்களின் புன்னகையால் எழுதப்பட்டிருக்கும் சாதனைச் சரித்திரம்தான் திராவிட மாடல்!

திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாள் முழுவதும் என்னால் பட்டியலிட முடியும்! இத்தனை திட்டங்களை நாம் செய்கிறோம் என்றால், அது உங்கள் கையில் வந்து சேர முக்கியக் காரணமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். அப்படிப்பட்ட அரசு ஊழியர்கள் மீது எஸ்மா, டெஸ்மா தொடங்கி, ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேர் டிஸ்மிஸ் என்று ஏகப்பட்ட கொடுமைகளை அனுபவித்த ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. அதிலும் முதலமைச்சராக இருந்த பழனிசாமியே அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தி பேசினார்.

ஆனால், தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் நமது திராவிட மாடல் அரசுதான், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏராளமான சாதனைகளைச் செய்து, அவர்களது கண்ணீரைத் துடைத்து, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறோம்; இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பங்களில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறோம்!

2021-ல் திராவிட மாடல் ஆட்சிக்காக உங்கள் ஆதரவைக் கேட்டு வரும்போதே, அடுத்த பத்து ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை உறுதிமொழிகளாகக் கொடுத்துவிட்டுத்தான் நான் வாக்கு கேட்டேன். அந்த அடிப்படையில், திராவிட மாடல் என்பது 2.0 ஆட்சியில் அடையவுள்ள புதிய உயரங்களுக்கான அடித்தளம். அதற்கான செயல் திட்டமாகத்தான் நமது ‘சூப்பர் ஸ்டாரை’ களமிறக்கியிருக்கிறோம்! ” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share