சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன.
மக்களவைத் தொகுதி மறு வரையறை செய்யும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. ஆனால் பெரும்பான்மை வாக்குகள் இல்லாததால் இந்த மசோதா நேற்று முன்தினம் தோல்வியடைந்தது.
இது தொடர்பாக நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்படாததற்கு மன்னிப்பு கேட்டார்.
மேலும் திமுக, திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் சொந்த மாநில மக்களை வஞ்சித்து விட்டது என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் விதிகளை மீறி பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடி இருக்கிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளன.
தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் பிரதமரின் உரையாடல் அந்த விதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளது.
அவர் பேசிய தொனி, உள்ளடக்கம் ஆகியவை எந்த வகையிலும் அரசு தொடர்புடையதாக தெரியவில்லை. முற்றிலும் அரசியல் சார்ந்தவையாக உள்ளது. எதிர்க்கட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு தாக்கி பேசியுள்ளார். தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் வாக்காளர்களை தூண்டும் வகையில் அவரது உரையாடல் உள்ளது.
தேர்தல் நடக்கும் நேரத்தில், பதவியில் இருக்கும் பிரதமர், அரசியல் செய்திகளைப் பரப்புவதற்காக ஒரு தளமாக பொதுத்துறை ஊடகத்தை பயன்படுத்துவது என்பது சமமற்ற சூழலை உருவாக்குவது மட்டுமின்றி, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்ற கொள்கையையே சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
பிரதமர் மோடியின் உரை தூர்தர்ஷன் மற்றும் சன்சத் டிவி போன்ற தேசிய பொதுத்துறை ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது கவலைக்குரிய விஷயமாகும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடி அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளதோடு இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
