திமுக கூட்டணியை ‘தீய சக்தி’ என்று விமர்சித்துவிட்டு, அதே திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தான் கெஞ்சிக் கூத்தாடி 108 தொகுதிகளை வைத்துக் கொண்டு முதல்வர் விஜய் ஆட்சி அமைத்துள்ளார் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், “திரையுலகில் உச்சபட்ச நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் அவர்களால் மற்ற கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அன்றைக்கே நான் கூறினேன். இன்றைக்கு திமுக, அதிமுகவிற்கு மாற்று என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்கள் ஒரு பேராபத்திற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். இதை மக்கள் விரைவில் உணர்வார்கள். நடந்து முடிந்த தேர்தலில் விஜய் 108 தொகுதிகளில் வென்றுள்ளார்; ஆனால் எதிர்க்கட்சிகள் 126 தொகுதிகளில் வென்று, கிட்டத்தட்ட 3 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளன என்பதை தவெகவினர் உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளில் பித்தலாட்டம்
புதிய ஆட்சி என்பதால் நிர்வாகப் பயிற்சி பெற 6 மாத அவகாசம் கொடுப்பதில் தவறில்லை; யாரும் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக் கேட்கவில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே இவரே தான் முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்தார். தேர்தலில் மாதம் ஒன்றுக்கு 200 யூனிட் இலவசம் என்று கூறிவிட்டு, தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தான் கணக்கீடு என்பதால் இது மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா?
அதேபோல், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை 100 விழுக்காடு தள்ளுபடி செய்வேன் என்றார். ‘நான் பொய் சொல்ல மாட்டேன்’ என்று கூறிவிட்டு, தற்போது ரூ.50,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி என்று அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. இதைக் கண்டித்துத் தான் டெல்டா மாவட்ட விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகிறார்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டுவது அரசியல் கட்சியாக மட்டுமில்லாமல், ஒரு குடிமகனாக எங்களுடைய கடமையாகும்.
கூட்டணி கட்சிகளைச் சாடல்:
திருச்சியில் முதல்வர் விஜய் பேசிய உடல்மொழியும், அவர் பேசிய விதமும் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். திமுக கூட்டணியை ‘தீய சக்தி’ என்று விமர்சித்துவிட்டு, அதே திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தான் கெஞ்சிக் கூத்தாடி 108 தொகுதிகளை வைத்துக் கொண்டு இவர் ஆட்சி அமைத்துள்ளார். கம்யூனிஸ்ட் மற்றும் திருமாவளவன் ஆகியோர் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது தவறு என்பதை உணரும் காலம் விரைவில் வரும்.
குதிரை பேரம்
அமமுக சார்பில் மன்னார்குடியில் வென்ற ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் மாட்ட மாட்டார் என்ற தைரியத்தில் தவெகவினர் களவாடிச் சென்றுள்ளனர். நீங்கள் தூய சக்தி என்றால், அந்த எம்எல்ஏ-வை ஆளுநரிடம் அழைத்துச் சென்று கடிதம் கொடுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் கார்லேயே வைத்து ரகசியமாகக் கையெழுத்து வாங்கினீர்கள்? இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்களை ஆசை காட்டி, சின்னப் பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுத்துக் கடத்துவது போலத் தூக்கி வந்து ஆதரவு பெற்று ஆட்சி நடத்துகிறார்கள். இவர்களின் இந்த அயோக்கியத்தனத்திற்குப் பின்னால் இருக்கும் ‘தூய சக்தி’ யார் என்பது மக்களுக்குத் தெரியும்.
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு
புதிய ஆட்சி அமைந்தவுடன் சமூக விரோதிகள் பயப்பட வேண்டும். ஆனால் இந்த தவெக அரசு அமைந்த பிறகு அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கடந்த ஆட்சியை விடத் தற்போது போதைப்பொருள் புழக்கம், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல், வன்கொடுமைகள், திருட்டு, கொலைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. பிங்க் வண்டிகளுக்குப் பெயிண்ட்டை மாற்றி வெள்ளை நிறமாக மாற்றியதைத் தவிர சட்டம் ஒழுங்கை காக்க இவர்கள் சீர்செய்யவில்லை.
தேர்தல் நேரத்தில் பேசுவதைப் போல இன்னும் கத்தி டயலாக் பேசிக் கொண்டிருக்காமல், ஒழுங்காக ஆட்சியை நடத்துங்கள் என்று மக்களில் ஒருவனாக நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
