தமிழ்நாட்டில் தக்காளி இஞ்சி போன்ற சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் தமிழக அரசு தக்காளி விற்பனையை தொடங்கியது. அங்கு ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 10) தலைமைச் செயலகத்தில் விலை உயர்வு தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் விலை உயர்வை கட்டுப்படுத்துவது, உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,
“அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கூட்டுறவு சங்க அங்காடிகளிலும் நியாய விலை கடைகளிலும் சந்தை விலையை விட குறைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யலாம்.
அதேசமயம் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குடிமை பொருள் காவல் துறை இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனைகளை அதிகப்படுத்த வேண்டும். காய்கறிகளின் விலை உயர்ந்தாலும் அதன் பலன் நேரடியாக விவசாயிகளுக்கு செல்லவில்லை என்று கேள்விப்படுகிறேன்.
இதனை சரி செய்ய உழவர் சந்தைகளின் செயல்பாடு பெரிதும் உதவும். எனவே இதில் வேளாண் துறை தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
கோவிட் காலத்தில் செயல்பட்டது போல நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போது மாநகராட்சி மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக தொடங்கலாம் என்று அறிவுரை வழங்கினார்.
பிரியா
அண்ணாமலைக்கு அருகதை இல்லை : உதயநிதி
ஷாருக்கானின் ஜவான்: டிரெய்லர் எப்படி இருக்கு?
