ஈரானின் ராணுவத் தளங்கள் மற்றும் ஏவுகணை கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இரவாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த மோதல் போக்கு காரணமாக, சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைக் குழு (U.S. Central Command CENTCOM), அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் தொடர்ந்து 3 நாட்களாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் தளங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் கட்டமைப்பு, ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா துல்லியமாகத் தாக்கி வருகிறது.
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களை இடைமறித்து எச்சரிக்கை செய்து வருகிறது ஈரான். மேலும், அமெரிக்க தலையீடு இருக்கும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் தாக்குதல்கள் கத்தார், குவைத், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், இந்தப் போர் நடவடிக்கை பிராந்திய அமைதிக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் “பேரழிவு விளைவுகளை” ஏற்படுத்தும் என்று எச்சரித்து, இரு தரப்பையும் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வலியுறுத்தியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்காவின் இந்த தாக்குதல்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 4% முதல் 6% வரை அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையாகும்; உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இந்த வழியாகத்தான் நடக்கிறது. எனவே, இப்பகுதியில் நீடிக்கும் பதற்றம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை மீண்டும் உயரும்?
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தற்போதைக்கு மாற்றமின்றி நீடிக்கின்றன. இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்கா- ஈரான் யுத்தத்தால் மே 15-ந் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் மே 19, மே 23 மற்றும் மே 25-ல் விலை திருத்தங்கள் செய்யப்பட்டன.
மே 25-ந் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.61-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.71-ம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மே 15 முதல் மே 25 வரையிலான காலப்பகுதியில் மட்டும் மொத்தம் ரூ. 7.50 வரை விலை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 107.77-க்கும், டீசல் விலை ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஜூன் 7-ந் தேதி ரூ.29 உயர்த்தப்பட்டது.
வணிக சிலிண்டர் விலை இந்த ஆண்டு மே மாதம் வரை 4 கட்டங்களாக மொத்தம் ரூ1,345 வரை உயர்த்தப்பட்டிருந்தது. ஜூலை மாதம் தான் முதன்முறையாக விலை குறைக்கப்பட்டது. கடந்த ஜூலை 1-ந் தேதி வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலையில் மட்டும் ரூ. 183.50 வரை குறைப்பு செய்யப்பட்டது.
ஆனால், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய புதிய தாக்குதல்களால் எந்த நிமிடத்திலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
