ஷாருக்கானின் ஜவான்: டிரெய்லர் எப்படி இருக்கு?
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 7 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ஜவான் படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. ஜவான் படத்தின் தமிழக வெளியிட்டு உரிமத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் ஜவான் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று (ஜூலை 10) வெளியிட்டுள்ளது. ஜவான் டிரெய்லரில் ஆக்ஷன், துப்பாக்கி சூடு போன்ற த்ரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே ஜவான் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நா வில்லனா முன்னாடி வந்து நின்னா, என் முன்னாடி எந்த ஹீரோவும் வந்து நிக்க முடியாது ராஜா என்ற ஷாருக்கானின் வசனம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
மோனிஷா
செந்தில்பாலாஜி புத்தர், ஆளுநர் வில்லனா? முதல்வர் கடிதத்தால் ஒன்றும் ஆகாது: அண்ணாமலை