சென்னை திருவிநகர் தொகுதியில் பள்ளிக் கூட கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் திருவிக நகர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. பல்லவி இடையே ’புரோட்டோகால்’ பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பான திருவிக நகர் எம்.எல்.ஏ. பல்லவி கொடுத்த உரிமை மீறல் மனு மீது நடவடிக்கை இல்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று ஜூன் 22-ந் தேதி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளையும் மரபு நெறிமுறைகளையும் புரோட்டோகால் (Protocol) காப்பது, செயல்படுத்துவதும் சட்டமன்றப் பேரவைத் தலைவராக எனது பொறுப்பும் மற்றும் கடமையும் ஆகும். அரசால் வெளியிட்டுள்ள மரபு நெறிமுறைகளின்படி புரோட்டோகால், அரசமைப்புத் தலைவர்கள் முதல் முக்கியப் பிரமுகர்கள் வரை உள்ள ஒவ்வொருவரின் நிலைக்கு ஏற்ப முன்னுரிமை வரிசை முறை வாரண்ட் ஆஃப் பிரசிடென்ஸ் (Warrant of precedence) அமைக்கப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமை வரிசைப்படி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுத்துறை உயர் அலுவலர்களும் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் மற்றும் அதிகாரத்தையும் நன்கு உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திருவிக நகர் தொகுதியில் அந்த பள்ளிக்கூடத் திறப்பு விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற நிகழ்வு, மரபு நெறிமுறை குறித்த புரிதல் இல்லாமல் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது அறிந்தோ, அறியாமலோ நடந்த அந்த நிகழ்வு இனிவரும் காலங்களில் தொடராது என நம்புகிறேன். அதனால் அந்த மனுவின் மீது மேல்நடவடிக்கை தேவையில்லை என கருதுகிறேன். உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதோ, வேறு வகையில் நடவடிக்கை எடுப்பதோ தேவையில்லை என்று கருதுகிறேன்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மற்றும் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் மரபு நெறிமுறைப்படி அந்த தொகுதியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகளை கடைப்பிடிக்க நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அலுவலர்களுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு மதிப்புக்குரிய அரசு தலைமைச் செயலாளர் அவர்களுக்கு உத்தரவிடுகிறேன்.
மேலும், இந்த முன்னுரிமை வரிசை வாரண்ட் ஆஃப் பிரசிடென்ஸ் தொடர்பான தமிழக அரசின் அரசாணை நகல், சட்டமன்ற உறுப்பினரின் மேசையில் வைக்கப்பட்டுள்ள சிறுகணினியில் நாளை பதிவேற்றம் செய்யப்படுவதுடன் அனைத்து உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் இன்று அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
மேயர் பிரியா VS தவெக எம்.எல்.ஏ. பல்லவி பிரச்சனை என்ன?
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மேயர் பிரியா மற்றும் எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவின் போது குத்துவிளக்கு ஏற்றும் சடங்கின்போது, மேயர் பிரியா, அங்கு இருந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மெழுகுவர்த்தியைக் கொடுத்தார். எம்.எல்.ஏ. பல்லவிக்கு முன்னுரிமை அளிக்காமல், அதிகாரிக்குக் கொடுத்தது தன்னை அவமதிப்பதாகக் கருதி எம்.எல்.ஏ. பல்லவி பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார்.
அத்துடன், தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்றும், அரசு விழாக்களில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், மேயர் தன்னை வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் பல்லவி குற்றம் சாட்டினார்.
இது குறித்து மேயர் பிரியா கூறுகையில், “எந்தவிதமான அவமதிப்பும் செய்யப்படவில்லை. அரசு நெறிமுறைகளின்படி (Protocol) தான் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.எல்.ஏ. குறித்த நேரத்தில் வராததே குழப்பத்திற்குக் காரணம். மேலும், ரிப்பன் வெட்டும் நிகழ்வில் எம்.எல்.ஏ.வை தான் மேயருக்கு முன்பே வெட்ட அனுமதித்தோம்” என்று விளக்கம் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சபாநாயகரிடம் தவெக எம்.எல்.ஏ. பல்லவி, உரிமை மீறல் நடவடிக்கை கோரி மனு கொடுத்திருந்தார். இம்மனு மீது நடவடிக்கை தேவை இல்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
