சட்டசபையில் புதிய மரபாக 2 முறை தேசிய கீதம்.. அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

Published On:

| By Mathi

TN Assembly National Anthem

தமிழக சட்டசபையில் புதிய மரபாக தேசிய கீதம் (National Anthem) 2 முறை பாடப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் பொதுவாக தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்படும்; இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும்.

ADVERTISEMENT

கடந்த திமுக ஆட்சியில் தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.

தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்று ஆளுநர் அர்லேகர் உரை வாசிக்கும் முன்னர், தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. இதனையடுத்து தேசியகீதமும் பாடப்பட்டது. ஆளுநர் உரை முடிவடைந்த பின்னர் இறுதியாகவும் தேசிய கீதம் பாடப்பட்டது.

ADVERTISEMENT

அதாவது தமிழக சட்டசபையில் 2 முறை தேசிய கீதம் பாடப்படும் புதிய மரபு நடைமுறைக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன், சட்டசபை வளாகத்தில் இன்று ஜூன் 18-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு கொடுத்திருக்கக்கூடிய சுற்றறிக்கையைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு அரசாங்க நிகழ்வு நடக்கும் இடத்திலுமே, எடுத்தவுடன் தேசியப் பாடல் வந்தே மாதரம் பாட வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை, தமிழ்த் தாய் வாழ்த்து முதன்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. மற்றபடி தேசிய கீதம் பாடுவதில் முரண் இல்லை.

ADVERTISEMENT

வந்தே மாதரம் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை உள்ளது. அதை நாமும் பின்பற்றவில்லை. தமிழுக்குதான் முதலிடம். தமிழ்த் தாய்க்குதான் முதலிடம். தமிழ் தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட்டது

3-வது முறையாக நான் பதில் சொல்கிறேன். தமிழ்த் தாய் வாழ்த்தோடு சட்டமன்றம் தொடங்கியது. தேசிய கீதம் பாடக்கூடாது என்று எதுவும் இல்லை, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. இதுதான் பதில்.

அரசு நிகழ்வுகளில் முதலில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்பது கூட மரபில்லை. ஆனால், வந்தே மாதரம் பல இடங்களில் பாடினார்கள். நாம் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share