தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி கடந்த மாதம் பொறுப்பேற்ற நிலையில், புதிய அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றியதைத் தொடர்ந்து, அதன் தமிழாக்கத்தைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையில் வாசித்தார். இத்துடன் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறுகையில், “வரும் 22-ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். 23-ஆம் தேதி விவாதத்திற்கான பதில் உரை இடம்பெறும். நாளை (ஜூன் 19) மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகும்.
அதன்படி மொத்தம் மூன்று நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வது குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. அவையில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை” என்று தெரிவித்தார்.
