தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஐந்தாண்டு காலமாக அவர்கள் நடத்திய திமுக ஆட்சிதான். சிங்கப்பெண்கள் குறித்து எதிர்க்கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த செய்திகளைப் பார்த்தால் மிகவும் கொடுமையாக உள்ளது. ஒரு மாதத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றங்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஆகும். ஜனநாயக நடைமுறைக்கு எதிராகக் குழந்தைகளைப் பயன்படுத்திப் பெரியவர்களிடம் வாக்கு கேட்டார் இன்று இருக்கும் முதலமைச்சர். ஆனால், அவரது ஆட்சியில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை, பெரியவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை உள்ளது.
வட மாநிலங்களில் இருக்கிறோமா?
இந்த புதிய அரசு ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே கோயம்புத்தூரில் 10 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது. தமிழ்நாட்டையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்டு உயிரிழந்தது. இந்தச் சம்பவத்திற்கு நீதி கேட்டு அங்கிருந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். கோவையிலும் சரி, கும்மிடிப்பூண்டியிலும் சரி, மரணமடைந்த குழந்தைகளின் உடலைப் பெற்றோரிடம் முறையாகக் கொடுக்காமல் வேறு இடத்தில் காவல்துறையின் மூலமாகவே அடக்கம் செய்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா அல்லது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருக்கிறோமா என்று எங்களுக்குச் சந்தேகம் வருகிறது.
‘சிங்கப்பெண் படை’ என்று ஒரு திட்டத்தை முதல்வர் தொடங்கினார். அந்தத் திட்டம் வந்த அடுத்த நாளே காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி, 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின. சிங்கப்பெண் படை குற்றவாளிகளைப் பிடிப்பார்கள் என்று பார்த்தால், அவர்களும் கூலாக ரீல்ஸ் போட்டுக் கொண்டும், போஸ்ட் போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்று சொல்வதைப் போன்ற பாதையை அந்தச் சிங்கப்பெண் படை பின்பற்றுகிறதோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.
இந்த ஒரு மாதத்தில் நடந்த குற்றச் சம்பவங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால், பெரும்பாலான குற்றங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு வந்து தொகுதி தொகுதியாகப் போய் நலத்திட்ட உதவிகளை எல்லாம் செய்வார்கள் என்று பார்த்தால், அவர்கள் கட்சியினர் தொகுதி வாரியாகப் போய் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “பொத்தாம் பொதுவாகப் பேசுவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நிகழ்வுகள் நடந்து, அதில் ஆளுங்கட்சியினர் இருந்தாலும் கூட, முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்ற செய்தியும் வந்து கொண்டுதான் இருக்கிறது; நானும் பத்திரிகையில் பார்க்கிறேன். குறிப்பிட்டு இந்த இடம், இந்தக் கட்சிக்காரர் என்று நீங்கள் பெயர் குறிப்பிட்டுப் பேசினால் அதை ஏற்றுக்கொள்வதில் ஆட்சேபனை இல்லை” என்று தெரிவித்தார்.
யார் அந்த மேலிடம்
இதைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஆளுங்கட்சியின் ஆலந்தூர் பகுதிச் செயலாளல்,ரா கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணிற்குப் பண உதவி செய்கிறேன் என்று சொல்லி பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. சேலத்தில் பொள்ளாச்சி சம்பவத்தைப் போன்ற ஆளுங்கட்சியின் ஆதரவாளரான மணிகண்டன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். திருவாரூரில் ஆளுங்கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் கல்லூரி மாணவியை ஈவ் டீசிங் செய்து இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
இது எல்லாவற்றிற்கும் மேலாகத் தூத்துக்குடியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஓர் அப்பாவிப் பெண்ணை, இரண்டு ஆளுங்கட்சி ஆட்கள் காரில் அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய பாதிக்கப்பட்ட பெண், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சொல்லித்தான் அழைத்துச் செல்லப்பட்டதாகப் பேட்டி கொடுத்திருக்கிறார். இது எல்லாம் மேலிடத்திற்குத் தெரியும் என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். யார் அந்த மேலிடம் என்று மக்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமையை ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களிடம் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால், ‘யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன்’ என்று சொன்ன முதலமைச்சர், இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை. அதற்கு மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். இதற்குப் பெயர்தான் மாற்றமா? இதற்குப் பெயர்தான் தூய சக்தியா என்று மக்கள் கேட்கிறார்கள். நமது முதலமைச்சர் ஆறு மாதம் டைம் எடுத்துக் கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வரை நாங்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது; நாடும் தாங்காது. இதைப் பற்றி கேள்வி எழுப்பினால் கூட, காவல்துறைக்குப் பொறுப்பேற்கக் கூடிய முதலமைச்சர் எதுவும் பேச மாட்டேன் என்கிறார். ‘To remain silent in the face of evil is itself evil’ (தீமையின் முன்னால் மௌனமாக இருப்பதுவே ஒரு தீமைதான்) என்று ஒரு பழமொழி உண்டு. அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இந்த அரசுக்குச் சரியாகப் பொருந்தும். ஆகவே, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
திமுகதான் காரணம்
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தன்னுடைய பேச்சில் எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கபூர்வமாக, ஆதாரப்பூர்வமாகக் கூறியிருந்தால் அதைக் குறிப்பெடுத்து அதன்படி இந்தத் தமிழ்நாடு அரசு தனது திசைவழிப் போக்கைத் சரியான வகையில் செயல்படுத்தத் தயாராகத்தான் உள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்குவதற்கோ, மாற்றுவதற்கோ எங்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை. சில விஷயங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும். ’40 நாட்கள் விரதம் முடிப்பது போல இந்தத் தற்காலிக அரசு நிறைவு செய்துள்ளது; இந்த 40 நாட்களும் பார்த்துவிட்டேன், ஏமாற்றம் மட்டும்தான் மிச்சம்’ என்று அவர் சொன்னார். ஆனால் மக்கள், திமுகவின் 40 நாட்கள் அல்ல… அவர்களின் ஐந்தாண்டு கால ஆட்சியையும் பார்த்துவிட்டு, அதில் வந்த ஏமாற்றத்தால்தான் இப்படி ஒரு தீர்ப்பை (ஆட்சி மாற்றத்தை) வழங்கியிருக்கிறார்கள். நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் சொன்னதை எல்லாம் இந்த 40 நாட்களில் நீங்கள் செய்திருக்க முடியாது, அதற்கு திமுகதான் காரணம் என்று சொன்னார்கள். நானும் அதையேதான் சொல்கிறேன். இன்று அவர் சொன்ன சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஐந்தாண்டு காலமாக அவர்கள் நடத்திய திமுக ஆட்சிதான் காரணமாக இருக்க முடியும்.
சிங்கப்பெண்கள் இந்த நாட்டின் தமிழக அரசின் பொக்கிஷம் அவர்களை குறித்து மீண்டும் மீண்டும் இப்படி சிறுமைப்படுத்தி பேசியதற்காக பேரவை தலைவர் கண்டிக்க வேண்டும். சிங்கப்பெண்களை குறித்து இனி யாராவது தவறாக பேசினால் அதை அனுமதிக்க கூடாது. இப்படி தவறாக பேசியதற்காக எதிர்க்கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்
