2 தொகுதிகளில் 822 ஓட்டுகள் வாங்கிய கட்சிக்கு மக்களவையில் 20 எம்.பி.க்கள்! பாஜகவின் மிரட்டல் ’மேஜிக்’.. அலறும் ஜனநாயகம்!

Published On:

| By Mathi

TMC Vs BJP 822 votes, 20 MPs: How a tiny party just rocked the Parliament

‘ஜனநாயகம்’ சில நேரங்களில் நம்பவே முடியாத அளவுக்கு பற்பல அதிசயங்களின் தாய்வீடாகவும் அமைந்துவிடுவது உண்டு. ‘ஜனநாயக’த்தின் பெயரில் அரசியல், சமூக கட்டமைப்புகளுக்கான அடிப்படையான விழுமியங்கள் சில நேரங்களில் ஆழ குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடுவதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம்தான் ஜனநாயகத் திருநாடான இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. ஆம்.. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் (TMC) பாஜகவுக்கும் (BJP) இடையேயான யுத்தத்தில்தான் மிகப் பெரும் நம்பவே முடியாத ”பேரதிசயம்” ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் ஒன்று NCPI Nationalist Citizens Party of India- நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற NCPN.

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு பதிவு செய்யப்பட்ட மிக மிக சிறிய பதிவு செய்யப்பட்ட, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசியல் கட்சி.

2 தொகுதிகளில் 822 வாக்குகள்

2023 திரிபுரா தேர்தலில் இந்த NCPN கட்சி,

ADVERTISEMENT
  1. சாவமனு (Chawmanu – ST)
  2. கைலாஷகர் (Kailashahar) ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டது.

சாவமனு தொகுதியில் போட்டியிட்ட NCPN வேட்பாளர் பர்ஜேடா திரிபுரா மொத்தம் 536 வாக்குகளைப் பெற்றார். இங்கு நோட்டாவுக்கு 500 வாக்குகள் கிடைத்தன. நோட்டாவை விட 36 வாக்குகள் கூடுதலாக பெற்றார் பர்ஜோடா.

கைலாஷகர் தொகுதியில் போட்டியிட்ட NCPN வேட்பாளர் ஜஹாங்கிர் அலி, மொத்தம் 286 வாக்குகளைப் பெற்றார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 537 வாக்குகள் கிடைத்தது.

ADVERTISEMENT

ஆக, 2023 திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் NCPN கட்சி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 822 வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்த 2 தொகுதிகளிலும் டெபாசிட்டையும் இழந்தது இந்த கட்சி.

இந்த அரசியல் கட்சி யாருடையது?

இக்கட்சியை தொடங்கியவர் பெயர் ஷியுலி குண்டு (Shiuli Kundu). மேற்கு வங்கத்தை தலைமையிடமாக கொண்ட NGO நடத்தி வருகிறார். இக்கட்சியின் திரிபுரா மாநில நடவடிக்கைகளை சாந்தனு சாஹா (Shantanu Saha) என்பவர் மேற்கொண்டு வருகிறார். இவர்கள்தான் கட்சியின் நிர்வாகிகள்.

சரி இந்த கட்சிக்கு இப்போது என்ன நடந்தது?

இப்படி நோட்டா ஓட்டுகளை விட குறைவாக, ஒரு மாநில சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடக் கூடிய அதுவும் வெறும் 822 ஓட்டுகளை மட்டுமே வாங்கக் கூடிய ஒரு கட்சிக்கு, நாடாளுமன்றத்தின் மக்களவையில் தற்போது 20 எம்.பி.க்கள் உள்ளனர் என்பதுதான் நிஜம். நாம் நம்பித்தான் ஆக வேண்டும். எப்படித்தான் நிகழ்ந்தது இந்த மேஜிக்?

டெபாசிட் வாங்காத கட்சிக்கு 20 எம்.பிக்கள் எப்படி?

அண்மையில் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. மொத்தம் 80 இடங்களில் மட்டும் வென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 60 எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தலைவர் மமதா பானர்ஜிக்கு எதிராக தனி அணியாகிவிட்டனர். இந்த அணியை மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆளும் பாஜக சர்க்கார் அங்கீகரித்துவிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும்தான் என்றில்லை.. நாடாளுமன்றத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் உடைந்து சிதறிவிட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 மக்களவை உறுப்பினர்கள், மமதா பானர்ஜிக்கு எதிரான அணியில் இருக்கின்றனர். இவர்கள் தங்களை தனி அணியாக அங்கீகரிக்க வேண்டும் என்று முதலில் கோரி இருந்தனர்.

ஆனால் நேற்று திடீரென மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, தாங்கள் அனைவருமே NCPN கட்சியில் இணைந்துவிட்டோம்.. அதனால் எங்களை NCPN எம்.பி.க்களாகவே அங்கீகரிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.

ஏன் இத்தகைய விபரீத முடிவு?

பொதுவாக, நாடாளுமன்ற விதிகள் ஒரு கட்சிக்குள் தனிப் பிரிவை உருவாக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ அனுமதிப்பதில்லை. ஆகையால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் சிக்கல்களில் இருந்து தப்பிக்க, ஒரு சிறிய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியுடன் இணைவதுதான் சரி என அந்த 20 எம்.பி.க்களுக்கு ‘அட்வைஸ்’ தரப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 10-வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணையும் போது, அது ‘பிளவு’ அல்லது ‘தாவல்’ எனக் கருதப்படாது.

இந்த விதியின்படி, திரிணாமுல் காங்கிரஸின் மொத்த பலத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான எம்.பி.க்கள் (மொத்தம் உள்ள 29 எம்.பி.க்களில் 20 பேர்) இணைந்திருப்பதால், அவர்கள் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். இவ்வாறு என்.சி.பி.ஐ-யுடன் இணைவதன் மூலம், அவர்கள் தங்கள் உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டு, என்.சி.பி.ஐ-யின் கீழ் புதிய அடையாளத்தைப் பெற முயல்கின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, இந்த இணைப்பை கடுமையாக எதிர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எழுதிய கடிதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் என்பது பிரிக்க முடியாத ஒரே கட்சி என்றும், எந்தவொரு பிரிவையும் அல்லது தனிப்பட்ட குழுவையும் அங்கீகரிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, ஒரு கட்சிக்குள் தனிப் பிரிவு உருவாக்குவது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும், சபாநாயகர் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் கட்சியின் தரப்பு நியாயங்களைக் கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. மேலும், இந்தக் கட்சித் தாவலை “கேலிக்கூத்து” என்று விமர்சித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்கள், இது பாஜகவின் ஆதரவுடன் நடக்கும் சதி என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போதைய நிலையில் சபாநாயகரின் இறுதி முடிவைப் பொறுத்தே இந்த 20 எம்.பி.க்களின் அரசியல் எதிர்காலம் அமையும் என்பதுதான் யதார்த்தம்.

திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பிளவுக்கும் பாஜகவுக்கும் (BJP) என்ன தொடர்பு?

பாஜகவின் ‘கைங்கர்யத்தால்’தான் மகாராஷ்டிராவின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சின்னாபின்னமாகி சிதறிப் போனதை நாடறியும்.

இந்த வரிசையில் இப்போது பாஜகவிடம் சிக்கி இருப்பது திரிணாமுல் காங்கிரஸ்.

திரிணாமுல் காங்கிரஸின் 20 எம்.பி.க்களின் ஆதரவு கிடைப்பதன் மூலம், நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பலம் கணிசமாக உயர்கிறது. இது முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுவதிலும், அரசின் கொள்கை முடிவுகளைச் செயல்படுத்துவதிலும் பாஜகவுக்குப் பெரும் பலமாக அமையும்.

NCPI/ NCPN போன்ற சிறிய கட்சியைப் பயன்படுத்தி சட்ட ரீதியாகத் தடையின்றி எம்.பி.க்களைக் கவர்ந்திழுப்பது, எதிர்காலத்தில் இதர மாநிலங்களிலும் இதேபோன்ற உத்திகளைக் கையாள பாஜகவுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது. இந்த NCPI தலைவர் என அறியப்படுகிற ஷியுலி குண்டு, பாஜகவின் தீவிர ஆதரவாளர்; இவரது சோசியல் மீடியா பக்கங்களில் அண்மையில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவும் இருக்கிறது. மமதாவின் தோல்வியை கொண்டாடிய பதிவுகளும் இருக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸை வலுவிழக்கச் செய்வதன் மூலம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க பாஜக திட்டமிடுகிறது.

ஆகையால் இது மேற்கு வங்கத்தின் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கு நேர்ந்த கதி என்பதுடன் முடிவடையப் போவது இல்லை.. தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கேள்விபட்டிராத கட்சிக்கு கூட ஒரே இரவில் 9,10 எம்.பி.க்கள் கிடைக்கக் கூடிய சாத்தியங்களை நிராகரித்துவிடவில்லை என்பதுதான் பாஜக அரங்கேற்றியிருக்கும் ஜனநாயகத்தின் இந்த மகா அதிசயம் உரக்கச் சொல்கிறது!

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share