தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரம், தற்போது சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
தமிழக சட்டசபையில் மே 13-ந் தேதி முதல்வர் விஜய் அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவு.
ஆனால் 47 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட அதிமுகவில் 25 எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய கோரியது அதிமுக.
அதே நேரத்தில் அதிமுகவின் 25 எம்.எல்.ஏ.க்கள் தங்களது தரப்பில் கொறடாவாக விஜயபாஸ்கரை தேர்வு செய்தது, கொறடா உத்தரவை மீறவில்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கொடுத்தனர்.
இந்நிலையில் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21 எம்.எல்.ஏ.க்கள், கொறடா உத்தரவை மீறியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தனர். அதே நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), பி. சத்தியபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை ஏற்பதாகவும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

இதனிடையே 21 எம்.எல்.ஏக்களை மன்னிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்ததால் 21 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
மேலும் ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீது ஏன் ’தகுதி நீக்க’ நடவடிக்கை எடுக்க கூடாது என விளக்கம் கேட்டும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், நோட்டீஸ் அனுப்பினார்.
இன்னொருபுறம், 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டதால் இந்த தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையமும் தொடங்கியது.

இந்த பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக இன்று வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக தாக்கல் செய்துள்ள மனுவில்,
- அதிமுகவின் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சட்டவிரோதம்.
- 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதன் மூலம், கட்சித் தாவல் தடை சட்டம் என்பதையே நீர்த்து போகச் செய்துவிட்டார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
- இதனால் ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ”தகுதி நீக்க” நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மேலும் 4 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையமானது இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுகவின் இம்மனு மீது நாளை மறுநாள் ஜூன் 17-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை தமது எக்ஸ் பக்கத்தில், “குதிரை பேரம் மூலம் கட்சி தாவிய 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று 4 தொகுதிகளும் காலியாக உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை அந்த 4 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்! என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு.. நாளை மறுநாள் விசாரணை” என தெரிவித்துள்ளார்.
