விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 4 அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள் நிலை என்ன? சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

4 ADMK MLAS

முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த 4 பேர் மீதான நடவடிக்கை தொடங்கி உள்ளது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

அதிமுக கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, கொறடா உத்தரவை மீறிய 21 உறுப்பினர்களின் விளக்கத்தை ஏற்று அவர்களை மன்னித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (ஜூன் 9) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “எடப்பாடி பழனிசாமி கடந்த 13-05-2026 அன்று அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தபடி, 21 உறுப்பினர்களின் மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளும் கைவிடப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

4 பேர் மீது நடவடிக்கை தொடக்கம்:

அதே சமயம், எஞ்சிய 4 உறுப்பினர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார். அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் மீதான நடவடிக்கை தொடங்கிவிட்டது என்றும், அது என்ன வகையான நடவடிக்கை என்பது விசாரணைக்குப் பிறகு முறையாக அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

த.வெ.க-வில் இணைந்த மாஜி எம்.எல்.ஏ-க்கள்:

முன்னதாக, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share