மீண்டும் உயிர் பெறும் அதிமுக ஆபீஸ் மோதல்! 3 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது பாய்ந்த வழக்கு; ஜேசிடி பிரபாகருக்கு மட்டும் விலக்கு

Published On:

| By Pandeeswari Gurusamy

JCD

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளுக்குத் தாவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, கடந்த 2022-ஆம் ஆண்டு ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தற்போது 3 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், கிடப்பில் கிடந்த இந்த வழக்கில் சிபிசிஐடி திடீரென களம் இறங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கடந்த 2022 ஜூலை 11 அன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே உச்சக்கட்ட அதிகாரப் போட்டி நிலவியது. பொதுக்குழு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், தற்போதைய தவெக அரசின் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நுழைந்தனர்.

ADVERTISEMENT

அப்போது இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. கற்களும், கட்டைகளும் பறந்ததில் ராயப்பேட்டை பகுதியே போர்க்களமானது. அலுவலகத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வன்முறை தொடர்பாக, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தரப்பிலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதவிர, தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாபுவை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆதிராஜாராம் ஆகியோர் மீதும் புகார் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த 3 வழக்குகளும் அதே ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டன. ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த வழக்குகள் எந்தவொரு பெரிய நகர்வும் இல்லாமல் விசாரணை கிடப்பில் போடப்பட்டிருந்தது.

தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், முந்தைய புகார்களின் அடிப்படையில் 3 முக்கிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் படி, அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கி, முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட சுமார் 300 பேர் மீது முதல் வழக்கு பாய்ந்துள்ளது.

கலவரத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200 பேர் மீது இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோதலில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாபு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆதிராஜாராம், ஜெயக்குமார், விருகை ரவி, வேளச்சேரி அசோக்குமார், ராஜேஷ், சத்யா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மீது மூன்றாவது வழக்கு பதிவாகியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இணைந்து வரும் இந்தச் சூழ்நிலையில், சிபிசிஐடி எடுத்துள்ள இந்தத் திடீர் நடவடிக்கை தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

இதில் அதிமுக தலைமை அலுவலக மோதல் விவகாரத்தில் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பெயர் மட்டும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share