அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அக்கட்சியின் முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. (C. Vijayabaskar) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரான சி.விஜபாஸ்கர், விராலிமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணியின் கொறடாவாக இருந்தார். ஆனால் இந்த அதிருப்தி அணியின் முயற்சி வெற்றி பெறாத நிலையில் சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள், கட்சி கொறடா உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு மன்னிப்பு கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தனர். இதனால் இந்த 21 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை பாயவில்லை.
அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் நேரில் சென்று சந்தித்தனர். ஆனால் சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் இருவரும் நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.
இந்த பின்னணியில் நேற்று எடப்பாடி பழனிசாமி மீது சிவி சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று பதிலடி கொடுத்தார். தற்போது எடப்பாடி பழனிசாமியை சி.விஜயபாஸ்கரும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சி.விஜயபாஸ்கர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,
கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. ‘வெற்றிக்கான பாதை அல்ல.’ வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல… எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான். இவ்வாறு சி.விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார்.
