3 ஆண்டு காத்திருப்பு.. பண்பாட்டு ஆய்வறிஞர் ‘தொ.பரமசிவன்’ சிலை திறப்பு எப்போது?

By Mathi

|

Published on 26 Nov 2026, 1:33 PM

Tho Paramasivan

பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவனுக்கு திருநெல்வேலியில் சிலை அமைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகளாகியும் அதற்கான இடம் ஒதுக்கப்படவில்லை என எழுத்தாளர் பாமரன் வேதனை தெரிவித்துள்ளார். தொ.பரமசிவனின் நினைவு நாளான டிசம்பர் 24-ந் தேதிக்குள்ளாவது அவரது சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எழுத்தாளர் பாமரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எழுத்தாளர் பாமரன் தமது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அறியப்படாத தமிழகத்தை நமக்கு அறிமுகப்படுத்திய தொ.பரமசிவன் மறைந்து 6 ஆண்டுகளாகிறது. ஆனால் அவரது நினைவுகளும் அவர் அளித்துச் சென்ற கருத்துக் கருவூலங்களும் நமக்கு வழித்தடங்களாக இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

ADVERTISEMENT

பண்பாட்டு ஆய்வறிஞரும் திராவிடத் தொன்மையின் பரிமாணங்களை நமக்குப் புகட்டியவருமான தொ.பரமசிவனின் நூல்கள் கடந்த அரசால் நாட்டுடமையாக்கப்பட்டதையும், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு சாலைக்கு ‘தமிழறிஞர் தொ.பரமசிவன் சாலை’ எனப் பெயரிடப்பட்டதையும் நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறோம்.

ஆனால் அவரது மார்பளவுச் சிலை நகரில் நிறுவப்படும் என திருநெல்வேலி மாநகராட்சியால் 2023-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னமும் கேட்பாரற்றுக் கிடப்பது பெரும் வருத்தமளிக்கிறது.

ADVERTISEMENT

மன்னர்களின் மணிமுடிகளில் இருந்து ஆய்வுகளைத் தொடங்கியவர்கள் மத்தியில் எளிய மக்களிடமிருந்து தமது ஆய்வுப்புலத்தை எடுத்துச் சென்றவர் தொ.ப. அத்தகைய மனிதருக்கு இழைக்கும் அநீதியாகப்படுகிறது இந்தத் தாமதம்.

சிலை தயார்.. இடம் ஒதுக்காத அதிகாரிகள்

தமிழக அரசுக்கு சிலைக்கான எந்தச் செலவும் ஏற்படாத வகையில் தொ.பரமசிவனின் மார்பளவுச் சிலையை மதுரையில் உள்ள ‘தொ.ப. கூடல்’ நண்பர்கள் தங்களது சொந்த செலவில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஏற்கெனவே மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சிலை வைப்பதற்கான இடத்தை ஒதுக்கி ஆணை பிறப்பிக்கும்படி, மாறி மாறி வந்த 3 மாவட்ட ஆட்சியர்களிடமும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துக் கெஞ்சியாயிற்று. ஆணைதான் இன்னமும் பிறப்பித்தபாடில்லை.

அமைச்சர் ராஜ்மோகன் எம்மைப் போன்றவர்களை அறிந்திராவிடினும் மரியாதைக்குரிய தொ.பரமசிவனை நன்கறிவார். எனவே, அவரைப் போன்றவர்கள் இச்செயலை முன்னெடுத்து நண்பர்கள் வடிவமைத்து வைத்துள்ள மார்பளவுச் சிலையையோ அல்லது தமிழக அரசே மனமுவந்து முன்வந்து தொ.பரமசிவனின் முழு உருவச் சிலையையோ நிறுவினால் மனதார நன்றி கூறும் தமிழ்கூறும் நல்லுலகம்.

மனைவி இசக்கியம்மாளின் ஏக்கம்

“நாம் சந்திக்கிற ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகம்தான். நூல் வாசிப்பினைவிட மானுட வாசிப்பு அநேக விஷயங்களைக் கற்றுத்தரும்” என அறிவூட்டிச் சென்ற அந்த மகத்தான மனிதனின் நினைவு நாள் டிசம்பர் 24.

அவரது வழிகாட்டி பெரியார் மறைந்த அதே நாளில்தான் தொ.பரமசிவனும் நம்மிடமிருந்து விடைபெற்றார். அந்த தினத்திற்குள்ளாவது அவரது உருவச் சிலை அம்மாநகரின் மக்களோடு உரையாட உதயமாகுமா? “அவுரு சிலையப்பாத்துட்டா போதும் தம்பி… மீதி நாள நிம்மதியா ஓட்டீருவேன்” என எதிர்பார்ப்போடு காத்திருக்கும் அவரது துணைவியார் இசக்கியம்மாளின் கோரிக்கை நிறைவேறுமா? இவ்வாறு பாமரன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel