நானும், ஓபிஎஸும் இணைந்தால் எடப்பாடி தரப்புக்கு ஏன் எரிச்சலும் கோபமும் வருகிறது என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வானகரத்தில் இன்று (ஆகஸ்ட் 6) அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மீண்டும் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார்.
அரக்கோணம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கோபால் தலைவராக அமமுகவுக்கு முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்பின் கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “2017ல் பெயர் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். அதிமுக என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது. இரட்டை இலை சின்னம் உங்களுக்கு இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியது.
சுயேட்சையாக நின்று ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றேன். இதற்கு காரணம் நீங்கள் தான். நம்மிடம் பணபலம் இல்லை. ஆனால் நமது கொள்கைக்காகவும் நடைமுறைக்காகவும் நிச்சயம் மக்கள் ஆட்சி பொறுப்பில் அமர்த்துவார்கள்.
இங்கு வந்திருக்கக் கூடிய யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. வெறும் மதிய உணவுதான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சில பேர் பொதுக்குழு உறுப்பினர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல நூறு கோடி ருபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் கடந்த ஆண்டு இதே இடத்தில் ரவுடிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் மற்றும் அவர்களது நண்பர்களை அவமானப்படுத்தி வெளியேற்றினார்கள்.
இன்றைக்கு ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், சையது கான் உள்ளிட்டோர் அமமுகவுடன் கைகோர்த்துள்ளனர். அனைவரும் இணைந்து கொடநாடு குற்றவாளிகளை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
2019 தேர்தலின் சமயத்தில், தீயசக்தி திமுகவை ஆட்சியில் அமரவிட்டுவிடக் கூடாது, அதற்கு எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று நான் சொன்னேன். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரளவேண்டும் என்று சொன்னேன்.
இதை காதிருந்தும் செவிடர்களாக இருந்தவர்கள் கேட்கவில்லை. பணத்திமிரால், ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற திமிரால், மக்களிடம் ஊழல் செய்து பெற்ற பணத்திமிரால், ஆணவத்தால் நம்மை வேண்டாம் என்றார்கள்.
நாம் தனியாக நிற்க அஞ்சுகிறோம் என்று நினைத்தார்கள். ஆனால் 2019ல் நாளைக்கு தேர்தல் என்றால் இன்றுதான் உச்ச நீதிமன்றம் நமக்குச் சின்னம் கொடுத்தது. கடைசி நாள் வேட்புமனு தாக்கல் அன்று தான் சின்னம் கிடைத்தது. இருந்தாலும் பின் வாங்காமல் தமிழகம் முழுவதும் போட்டியிட்டோம்.
அதுபோன்று 2021 தேர்தலின் போது திமுகவை வீழ்த்த வேண்டும் என ஒரு எச்சரிக்கை கொடுத்தோம். ஆனால் திமுக இன்று பெரிய கூட்டணியோடு வந்திருக்கிறது.
ஏற்கனவே ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 4 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த பழனிசாமி ஆட்சி நடத்தாமல் ஒரு கம்பெனி நிர்வாகத்தை நடத்தி கொண்டிருந்தார்.
டெண்டருக்கு புரோக்கரேஜ் செய்து கொண்டிருந்தார்கள். இதனால் மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.
அதனால்தான் திமுகவை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்களோடு சேரத் தயார் என்று சொன்னேன். என்னை கண்டுதானே அஞ்சுகிறீர்கள் நான் தேர்தலில் கூட நிற்கவில்லை என்று சொல்ல வேண்டியவர்களிடம் சொன்னேன். அதைத்தான் இன்றும் ஓபிஎஸும், வைத்திலிங்கமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஏதோ நாம் கூட்டணிக்காக காத்திருக்கிறோம் என்பது போன்றும், பலவீனமாக இருப்பது போன்றும் அவர்கள் (எடப்பாடி தரப்பு) எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் திமுகவின் தயவை நாடிக்கொண்டிருக்கிறார்கள், பயத்தின் உச்ச கொம்பில் இருக்கிறார்கள். வெளியில் தைரியமாக இருப்பது போல் வேஷம் போடுகிறார்கள்.

காரணம் அவ்வளவு முறைகேடுகள், குற்றசாட்டுகள். ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்தது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது என இவர்கள் மீது வழக்குகளை தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் பழனிசாமி கம்பெனி மீது கை வைத்தால் டிடிவி தினகரன் வளர்ந்துவிடுவார் என்று பயத்தில் ஆட்சி செய்வபவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர்களும் தவறு செய்கிறார்கள். தவறு செய்தவர்களும், செய்பவர்களும் இன்று ஓரணியில் இருக்கிறார்கள்.
பழனிசாமிக்கு பாராளுமன்றத் தேர்தலில் நிற்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமில்லை. எப்படியாவது டிடிவி தினகரனையும் ஓபிஎஸையும் ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அது நிச்சயம் நடக்காது.
2026ல் உண்மையான அம்மாவின் ஆட்சி அமைப்பது நாம் தான். அமமுக மாவட்ட செயலாளர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் அதிமுகவில் ஒரு மாவட்ட செயலாளர் மீது கைவைக்க சொல்லுங்கள். அது நெல்லிக்காய் மூட்டை போல் கொட்டி சிதறிவிடும். ஏனென்றால் அது செட்டில்மெண்ட் கம்பெனி.
ஜெயலலிதா தலைமையில் 96ல் சந்தித்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. என்றாலும் 25 சதவிகித வாக்குகளை பெற்றது. ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி எத்தனை சதவிகிதம் வைத்திருக்கிறார்.
எடப்பாடி தொகுதியில் ஜெயிக்க வேண்டும். பாமக தயவு இல்லாமல் அது நடக்காது என்பதால் 10.5% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார் பழனிசாமி.
பாமக தலைவர் அன்புமணி, நாங்கள் டெல்லியில் தான் கூட்டணியில் இருக்கிறோம். இங்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார். பாமக கூட்டணியில் இல்லாதபோது எடப்பாடி எப்படி மெகா கூட்டணி அமைப்பார்.
பாமக இல்லாமல் வட தமிழகத்தில் என்ன செய்துவிட முடியும். சி.வி.சண்முகத்தையும், முனுசாமியையும் வைத்துக்கொண்டு மைக்கில் தான் பேச முடியும். பகலில் தடுமாறக் கூடியவர் சி.வி.சண்முகம்.
நாம் வெற்றி பெறவில்லை என்றாலும் தனித்து போட்டியிட்டோம். ஆனால் பல நூறு கோடி செலவு செய்துவிட்டு முன்னாள் அமைச்சர்கள் மண்ணை கவ்விவிட்டார்கள்.
அரக்கோணம், ஆரணி தொகுதிகளில் தப்பி தவறி அதிமுக ஜெயித்தது. வட தமிழகத்தில் பாமக இல்லையென்றால் அதிமுக அவுட்.
டெல்டாவில் 4 அமைச்சர்கள் தான் வெற்றிபெற்றார்கள். கஜா புயலின் போது ஓட ஓட விரட்டப்பட்ட ஒரு அமைச்சர் வெற்றி பெற்றார் என்றால், அந்த வெற்றி எப்படி நடந்திருக்கும் என்று நமக்குத் தெரியும். அதுபோன்று சி.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் எப்படி வெற்றி பெற்றார்கள் என்றும் தெரியும்.
கொடநாடு வழக்கில் நாம் போராடியபோது எங்கேயாவது ஒரு இடத்தில் பழனிசாமி பெயரை சொன்னோமா. இல்லை. ஆனால் விஞ்ஞானி செல்லூர் ராஜுக்கு எப்படி பயம் வந்தது என்று தெரியவில்லை. அவர், முனுசாமி எல்லோரும் திட்டுகிறார்கள்.
நானும் ஓபிஎஸும் ஒன்று சேர்ந்தால் இவர்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது. ஏன் பதற்றம் வருகிறது. ஏன் கோபம் வருகிறது.
பெரம்பலூரில் இருந்து கன்னியாகுமரி வரை அதிமுகவுக்கு 10% வாக்கு சதவிகிதம் தான் இருக்கிறது. வட ஆற்காடு, தென் ஆற்காடு, சென்னை செங்கல்பட்டு, தர்மபுரி, சேலத்திலுல் 10 சதவிகிதம் தான் இருக்கும்.
ஊட்டியில் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு ஆகிய 5 தொகுதிகளிலும் 15 சதவிகிதத்தை தாண்ட முடியாது.
அமமுக காங்கிரஸ் கூட்டணியுடன் போகும் என்றால் அது திமுகவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். திமுகவை பற்றி நமக்குத் தெரியாதா? பாஜகவை கண்டு பயந்துகொண்டிருக்கிறது ஏனென்றால் மடியில் அவ்வளவு கனம்.
பாஜகவுக்கு காங்கிரஸ் எதிரி. அதனால் காங்கிரஸை கழற்றிவிடுங்கள் என்று பாஜக சொன்னால், திமுக செய்யும். 2014ல் கழற்றிவிட்டது போல.
அப்படி கழட்டிவிடும் போது காங்கிரஸ் ஒரு கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணியில் போவேன். இல்லை என்றால் மோடி தலைமையிலான கூட்டணி. அதுவும் இல்லை என்றால் தனியாக போட்டியிடுவோம்.
காங்கிரஸை எந்த காலக்கட்டத்திலும் திமுக விடாது என்று எழுதிக்கொடுப்பார்களா? ஸ்டாலினுக்கும், பழனிசாமிக்கும் தனியாக நிற்கும் தைரியம் இருக்கிறதா?
பழனிசாமியிடம் இன்று அல்ல என்றைக்கும் ஐக்கியமாகமாட்டேன். அது எனது ரத்தத்தில் இல்லை. தங்கள் மீது வழக்குகள் வந்துவிடக் கூடாது என்று சுயநலத்தால் பேரம் பேசி இன்று அம்மாவின் தொண்டர்களை பிரித்தாளுகிற அந்த தீயவர்கள், கயவர்கள் யார் என்று எனக்குத் தெரியும்.
துரோகம் செய்தவர்களை வரும் காலத்தில் அவர்களை அரசியல் ரீதியாக வீழ்த்தாமல் ஓயமாட்டேன்” என்று எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு பேசினார் டிடிவி தினகரன்.
பிரியா
